×

ஜெய்ப்பூர் காட்டன்…. இக்கட் காட்டன்… ஷக்காட் மெட்டீரியல்…

நன்றி குங்குமம் தோழி

ஹேண்ட்மேட் பேக்ஸ்

தோழிகள் இருவர் இணைந்தால் என்ன செய்வார்கள்..? ஷாப்பிங்… அரட்டை… சினிமா..?? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை… நாங்கள் பிஸினஸ் பார்ட்னர்ஸ்..புன்னகைத்தபடி, கைகோர்த்து விரல் உயர்த்துகின்றனர் தோழிகளான அகிலாவும் மகாலெட்சுமியும்.‘‘எனக்கு ஊர் மதுரை, அகிலாவுக்கு கோவை’’ என முதலில் பேசத் தொடங்கியவர் மகா என்கிற மகாலெட்சுமி. ‘‘இருவருமே கோவையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக எம்.இ. படித்தோம். படிப்பை முடித்ததும், மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு எங்களை தயார்படுத்தியதில், சுலபத்தில் வெற்றி கிடைக்கவில்லை. அவரவர் வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். பல எதிர்ப்புகள், நிறைய போராட்டம் என இருவருமே பெற்றோர் சம்மதத்தோடு அவரவர் காதலித்தவர்களை கரம் பிடித்தோம்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் செட்டிலானது சென்னையில்தான். குடும்பம், குழந்தையென வாழ்க்கை வேறொரு டிராக்கை நோக்கி எங்களை நகர்த்தியது. ஆனாலும், எதையோ ஒன்றை இழந்ததை போன்ற எண்ணம் இருவருக்கும் வரத் தொடங்கியது’’ என்ற மகாலெட்சுமி, தோழி அகிலாவை திரும்பிப் பார்க்க… அகிலா மேலே பேச ஆரம்பித்தார்.‘‘படிச்சுட்டு குடும்பம், குழந்தை என பெண்கள் சும்மாவே வீட்டில் இருப்பதில் அர்த்தமே இல்லை என இருவருக்குமே தோன்ற ஆரம்பித்தது.

என்ன செய்யலாம் என நிறையவே மூளையை கசக்கினோம். இருவர் கைகளிலும் கைக்குழந்தைகள் வேறு. குழந்தைகள் வளரும் வரை வேலைக்கு போவது சாத்தியமே இல்லைதான். குடும்பத்தையும் கவனித்து, குழந்தையையும் அருகில் இருந்து பார்த்துக்கொள்கிற மாதிரியாக இருவரும் என்ன செய்யலாம் எனத் தீவிரமா யோசித்ததில், ஆன்லைன் பிஸினஸ் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது’’ என்கிற அகிலா, மீண்டும் புன்ன கைத்து மகாவைப் பார்க்க, மகா மீண்டும் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘நானும் அகிலாவும் ஆன்லைனில் பொருட்களைத் தேடி வாங்குவதில் கில்லாடிகள். ஆன்லைன் மூலம் என்ன தொழில் செய்யலாம் என யோசித்ததில், ஆன்லைன் ஷாப்பிங்கில், ஹேண்ட்மேட் பேக்ஸ் மற்றும் வேலட்ஸ் மீது எப்போதுமே ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் பேப்ரிக் ஹேண்ட் கிராஃப்டெட் பேக்கின் விலை ஆன்லைனில் அதிகமாகவே இருக்கும்.என்னைப் போலவே, எக்கோ ஃப்ரெண்ட்லியான, பேப்ரிக்கில் தயாராகும் ஹேண்ட் கிராஃப்ட் ஹேண்ட் பேக்ஸ் மீது பெண்கள் பலருக்கும் ஆர்வம் உண்டு. இதையே தொழிலாக்கினால் என்ன என இருவரும் யோசித்ததில், பேப்ரிக் பேக்ஸ் மற்றும் வேலட்ஸ் தயாரிப்பாளர்களை தீவிரமாகத் தேடத் தொடங்கினோம்.

மிகப்பெரிய முயற்சிக்குப் பிறகே தயாரிப்பாளர்களை எங்களால் கண்டுபிடிக்கவே முடிந்தது. பேப்ரிக் பேக்ஸ்களை முதலில் நாங்கள் வாங்கி பயன்படுத்தி பார்த்து திருப்தி ஏற்பட்ட பிறகே டீலர்ஷிப் வாங்கும் முயற்சியை அடுத்ததாகக் கையில் எடுத்தோம். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆதரைஸ்ட் டீலர் என்கிற உரிமை எங்களுக்குக் கிடைத்தது.

டீலர்ஷிப் உரிமை எங்களின் கைகளுக்கு வந்ததுமே, ஆன்லைனில் டிஸ்பிளே செய்து விற்பனையை தொடங்கினோம். நண்பர்கள் மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய எங்களின் பட்டர்ஸ்காட்ச் (butterscotch) இன்ஸ்டா பக்கம் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்கள் பேக்ஸ், வேலட்ஸ், பவுச், காம்போ என கலர்ஃபுல்லாய் நிறையத் தொடங்கியது. ஒரிஜினல் ஜெய்ப்பூர் காட்டன் பேப்ரிக்ஸ் ஹேண்ட் கிராஃப்ட் பேக்ஸ், இக்கட் காட்டன் மெட்டீரியல்ஸ் பேக்ஸ் மற்றும் ஷக்காட் மெட்டீரியல் பேக்குகள் எங்களின் இன்ஸ்டா பக்கங்களை அலங்கரிக்கத் தொடங்கியது.

ஷக்காட் மெட்டீரியலில் திக் காட்டன் நூலைப் பயன்படுத்தி பேக் தயாரித்திருப்பார்கள். இது பார்ப்பதற்கு ரொம்பவே கிளாஷி லுக்கில் இருக்கும். கூடவே 4 மற்றும் 5 பீஸ்கள் இணைந்த காம்போக்களும் எங்கள் பக்கங்களில் இருக்கிறது.எங்களிடத்தில் டோட் பேக் (Tote bag), ஷோல்டர் பேக் (shoulder bag), லேப்டாப் பேக், டிராவல் பேக், ஸ்லிங் பேக்(sling bag), பேக் பேக் (back bag), க்ளட்ச் பேக்(clutch bag), ஹேண்ட் ஹெல்ட் பேக், டபுள்சைடு பிரின்டெட் கேன்வாஷ் பேப்ரிக் பேக், வேலட்ஸ், டிராவல் பவுச்சென வெரைட்டியான பேட்டன்களில் மிகவும் கலர்ஃபுல் கலெக் ஷன்களாய் கிடைக்கிறது. கூடவே மெட்டீரியலின் பெயர், தரம், எத்தனை பார்ட்டீஷியன் இதில் இருக்கிறது, விலை மற்றும் தபால் செலவுகளையும் கீழேயே தெரிவித்துவிடுவோம்.

குறைந்தது 300ல் தொடங்கி 750 ரூபாய் வரை எங்களிடம் கலெக் ஷன்ஸ் உண்டு. காம்போக்கள் 650ல் கிடைக்கும். இன்ஸ்டா அல்லது வாட்ஸ்ஆப் குரூப் டிஸ்பிளே பார்த்து வாடிக்கையாளர் செய்யும் ஆர்டர்கள், நேரடியாகவே அவர்களைச் சென்றடையும்.எங்களுடையது முழுக்க முழுக்க நேரடி ஆன்லைன் விற்பனை என்பதால், கடை வாடகை, மின்சாரச் செலவு, இடைத்தரகர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் என எதுவும் கிடையாது. இதனால்தான் தரமான தயாரிப்பினை, நாங்கள் மிகவும் மலிவான விலையில் கொடுத்து எங்கள் வாடிக்கையாளர்களை ரொம்பவே திருப்தியடையச் செய்கிறோம்.இதுவரை 3500க்கும் மேற்பட்ட மாடல் ஹேண்ட்மேட் ஹேண்ட் பேக்ஸ்களை கஷ்டமர்களிடத்தில் சேர்த்திருக்கிறோம். சில வாடிக்கையாளர்கள், அன்பளிப்பிற்காக பண்டிகை நேரங்களில் பல்க்காக ஆர்டர்களை செய்கிறார்கள்.

தோழிகளாய் இருந்த நாங்கள் பிஸினஸ் பார்ட்னர்களாகவும் களம் இறங்கி 2 வருடத்தை கடந்தாச்சு. வாட்ஸ்ஆப் குரூப்பில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்பில் இருக்கிறார்கள். இன்ஸ்டா பக்கத்தில் 20 ஆயிரம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் எங்கள் வாடிக்கையாளர்களே.

இந்த வெற்றிகள் எல்லாமே எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகவே நடந்திருக்கிறது. ஆர்டர்களே இல்லாமல் சும்மா இருந்த நாட்களும் எங்களுக்கு இருந்தது. அவற்றை எல்லாம் பொறுமையாக கடந்து, தொடர்ந்து முயற்சித்ததன் காரணமாக, வேர்ல்ட் ஆஃப் மவுத்தில், எங்கள் பட்டர்ஸ்காட்ச் இன்ஸ்டா பேஜை வாடிக்கையாளர்களிடத்தில்
சேர்த்திருக்கிறோம்.

இது எங்களின் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். விரைவில் சென்னையில் நேரடி விற்பனைக்கான ஷோரூம் ஒன்றை தொடங்கும் எண்ணமும் இருக்கிறது…’’ கைகோர்த்தபடி, விரல் உயர்த்தி விடைபெற்றனர் தோழிகள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post ஜெய்ப்பூர் காட்டன்…. இக்கட் காட்டன்… ஷக்காட் மெட்டீரியல்… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED நதியை கொல்லும் நம்பிக்கை… மீட்டுருவாக்கம் செய்யும் பெண்கள்!