×

9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி தமிழக அரசு ஆணை வெளியீடு..!!

சென்னை: 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஒன்பது கூட்டுறவு மற்றும் ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு சம்பள நிலுவைத் தொகை , இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு ரூ.63.61 கோடி வழிவகை முன்பணக் கடன் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு கரும்பு சாகுபடியினை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின் பேரில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்திற்கும் கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேல் கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 2022-23 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாறு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு கனிசமாக அதிகரித்ததுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் உயர்ந்து வருகிறது.

ஆம்பூர், தேசிய மற்றும் நடிப்பிசை புலவர் கே. ஆர். ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு பற்றாக்குறையின் காரணமாக ஆலையின் அரவை இயங்காமல் இருந்து வருகிறது. மேற்கண்ட ஆலைகளில் பணிபுரிந்த விருப்பமுள்ள பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிற கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு அயற்பணியில் பணிபுரிய ஆணையிடப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், மேற்கண்ட சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்த காலத்திற்குரிய சம்பளம் நிலுவை மற்றும் இதர சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வழங்குமாறு தொடர்ச்சியாக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கருணையுடன் பரிசீலனை செய்து மேற்கண்ட மூன்று சர்க்கரை ஆலைகளுக்கு முன்பண வழிவகைக் கடனாக ரூ.21.47 கோடி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கும், எம்.ஆர்.கே, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு முன்பண வழிவகைக் கடனாக ரூ.42.14 கோடி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம் மேற்கண்ட சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் வரும் பருவத்தில் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The post 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி தமிழக அரசு ஆணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,9 Government of Tamil Nadu ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...