×

ரயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஊட்டி மலை ரயில் 7 நாள் ரத்து?

*கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி பெய்த கனமழை காரணமாக 4 முதல் 7ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு நேற்று மலை ரயில் சேவை துவங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் – கல்லாறு இடையே ரயில்வே பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்திற்கு அடியில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், கல்லாறு – அடர்லி இடையே மண் சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில், வழக்கம் போல மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரயில் 184 பயணிகளுடன் உற்சாகமாக புறப்பட்டு சென்றது.இதனிடையே, ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் தண்டவாள அரிப்பு குறித்த தகவல் அறிந்த ரயில்வே நிர்வாகம் பாதி வழியிலேயே மலை ரயிலை மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி வந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.ரயில்வே பயணிகள் செலுத்திய பயணக்கட்டணம் முழுமையும் ரயில்வே நிர்வாகத்தால் திருப்பி வழங்கப்பட்டது. தண்டவாளப்பணி சீரமைப்பு பணிக்காக நேற்று ஒரு நாள் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மலை ரயில் உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மலை ரயில் சேவை மேலும் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post ரயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஊட்டி மலை ரயில் 7 நாள் ரத்து? appeared first on Dinakaran.

Tags : Ooty ,Mettupalayam ,UNESCO ,Ooty mountain ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...