×

தீபாவளிக்கு பின் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. நவம்பர் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 17ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தீபாவளிக்கு பின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே போல், புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழையின் தன்மையைப் பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், இரவு முதல் அதிகாலை வரை பெரிய அளவிலான மழைப்பொழிவு இல்லாததால் விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

The post தீபாவளிக்கு பின் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. நவம்பர் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Northeast ,Diwali Wind ,CHENNAI ,SOUTHWEST BENGAL ,Diwali ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...