×

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, நவ.10: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கடன் திட்டங்களில் பயனடைய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  விண்ணப்பதாரர் 18 வயது முடிவடைந்தவராகவும் 60வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2லட்சம் வரை 5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15லட்சம் வரையும் 4சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்திருக்க வேண்டும். சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15லட்சம் வரையும் 4சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Tamil Nadu Economic Development Corporation ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் மக்களின்...