×

நலவழித்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

பாகூர் நவ. 10: டெங்கு காய்ச்சலுக்கு ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமாம்பாக்கம், பனித்திட்டு, கந்தன்பேட், கன்னியகோயில் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் பனித்திட்டு, ஈச்சங்காடு கிராமத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பலியானதாக செய்தி வெளியானது. இதற்கு, நலவழித்துறை இயக்குனர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என்றும் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பில் இறந்ததாக மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், சமூக ஆர்வலர்கள் கூறும்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலியானவர்கள் ஏற்கனவே நீரிழிவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்படைந்தவர்கள்தான். அவர்கள் அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு நல்ல நிலையில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பின்னர்தான், உயிரிழந்துள்ளனர். ஆனால், நல வழித்துறையினர், டெங்கு காய்ச்சலை மறைக்கும் வகையில், நீரிழிவு நோயால் தான் இறந்து விட்டதாக காரணம் கூறுகின்றனர். இறந்தவர்கள் எந்த நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர் என்று நலவழித்துறை கூற மறுத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் நடந்த வரும் டெங்கு மரணங்களை, அரசு மூடி மறுப்பதாகவே தோன்றுகிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய அரசு மருத்துவ குழுக்களை அமைத்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து உண்மையான டெங்கு பலி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட்பகுதியை சேர்ந்த ேஹாட்டல் தொழிலாளி வரபிரகாசம்(58) என்பவரது மனைவி ஆரோக்கியமேரி(53) கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கிருமாம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் கிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரி சோதனையில், அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். கிருமாம்பாக்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நலவழித்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : central medical team ,Bagur ,Dinakaran ,
× RELATED திருமண நிகழ்ச்சியில் மோதல்