×

காரைக்குடி அருகே கோயில் உண்டியலில் பணம் திருட்டு

காரைக்குடி, நவ.10: காரைக்குடி அருகே சங்கராபுரம் பகுதியில் உள்ள காட்டம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அருகே சங்கராபுரம் பகுதியில் காட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பணியாளர்கள் நேற்று காலை வழக்கம் போல் கோவில் கதவை திறந்துள்ளனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்து பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் வந்து பார்த்த போது கோவில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கோவிலில் உள்ளே இருந்த சிசிடிவி கேமரா ஹார்டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.

சம்பவ இடத்தை சிவகங்கை தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ராம்போ உதவியுடன் தீவிர ஆய்வு செய்தனர். இதுகுறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் உண்டியல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பக்தர்களின் காணிக்கை அதிக அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

The post காரைக்குடி அருகே கோயில் உண்டியலில் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kattamman ,Sankarapuram ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்