×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் நவ: 10: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணியர்களின் வசதிக்காக ‌திருவள்ளூர், மாவட்டம், பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் ஏற்படுத்தப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வதற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் பூந்தமல்லியில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து போக்குவரத்து துறை, வருவாய்த்துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளோடு சேர்ந்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

குடிநீர் வசதி, கழிவறை வசதி, போதிய வெளிச்சம், பொதுமக்களுக்கு தேவையான பெயர் பலகைகள், உதவி மையம் அமைப்பது, தற்காலிக காத்திருப்பு அறை ஏற்படுத்துவது, உணவு மற்றும் குடிநீர் தேவையான அளவு கிடைக்க செய்வது, கூட்ட நெரிசல் இன்றி மக்கள் செல்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். வருகிற தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு பேருந்துகள் சிரமம் இன்றி இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகளோடும் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

பொதுமக்கள் குறிப்பாக ஓசூர், தர்மபுரி, ஆற்காடு, சித்தூர், ஆம்பூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஆரணி, செய்யாறு, திருப்பதி மற்றும் திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். கிட்டத்தட்ட 656 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் 501 பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கும், சிறப்பு பேருந்துகளாக 155 பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், ஆணையர் லதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் (திருவள்ளூர்) நெடுஞ்செழியன், காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் காவேரி, வட்டாட்சியர் மாலினி, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Poonamallee – ,Bangalore National Highway ,Diwali festival ,Thiruvallur ,Chennai ,Diwali ,Poontamalli - ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்