×

காலாண்டு வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 6 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல்: வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று லாரி உரிமையாளர்கள் காலை முதல் மாலை 6 வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்மூலம் ரூ.30 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கனகர வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரிகளை கூடுதலாக திறக்க வேண்டும். ஆன்லைன் வழக்குகளை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையொட்டி, லாரிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படிருந்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள், மணல் லாரிகள், ட்ரெய்லர் லாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால், அந்த லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் நேற்று, சுமார் 6 லட்சம் கனரக வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. நாமக்கல் பகுதியில் லாரித்தொழில் தொடர்புடைய லாரி பட்டறைகள், மெக்கானிக் பட்டறைகள், ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களும், மூடப்பட்டிருந்தன. இதே போல், தமிழகத்தில் இயக்கப்படும் சுமார் 2 ஆயிரம் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகளும் நேற்று இயக்கப்படவில்லை. அவை பாட்டிலிங் பிளாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாலை 6 மணிக்கு மேல் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் லோடு ஏற்றிச் சென்றன. தமிழகம் முழுவதும் சுமார் 55 ஆயிரம் மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாக, மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறுகையில், ‘அரசுக்கு எங்களது நியாயமான கோரிக்கையை தெரிவிக்கும் வகையில், அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 75 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. போராட்டத்தின் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறுகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் 15,000 லாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன என்று தெரிவித்தார்.

The post காலாண்டு வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 6 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Namakkal ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...