×

சாதிவாரி கணக்கெடுப்பால் பீகாரில் இடஒதுக்கீடு 65 சதவீதமாக அதிகரிப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

பாட்னா: பீகாரில் 50 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பீகாரில் சமீபத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், ஏற்கனவே உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மசோதாக்கள் நேற்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதன் மூலம், எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், எஸ்சிக்களுக்கு 16 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், இபிசி பிரிவினருக்கு 18ல் இருந்து 25 சதவீதமாகவும், ஓபிசிக்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், ‘‘ ஒன்றிய அரசு சில ஆண்டிற்கு முன் கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சேர்த்து பீகாரில் மொத்த இடஒதுக்கீடு 75 சதவீதமாக இருக்கும். ஒன்றிய அரசும் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டை அதிகரித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.

* சிறப்பு அந்தஸ்து
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், ‘‘பண்டைய காலத்தில் பீகார் மாநிலம் மிகவும் முன்னேறியிருந்தது. சில வரலாற்றுக் காரணங்களால் தற்போது தேக்கமடைந்துள்ளது. எனவே இழந்த நமது பெருமையை மீட்க சில உதவிகள் தேவைப்படுகின்றன’’ என மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்க இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பால் பீகாரில் இடஒதுக்கீடு 65 சதவீதமாக அதிகரிப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Assembly ,Legislative Assembly ,Bihar… ,Dinakaran ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...