சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், எம்.சி ரோடு வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “சென்னை போக்குவரத்து காவல்துறை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், எம்.சி ரோடு வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீபாவளிக்கு பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் பூக்கடையில் உள்ள பட்டாசு கடைகள் வாகன நெருக்கம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பட்டாசு கடைகள் அனைத்தும் தீவுதிடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிகப்படியான பட்டாசு பெட்டிகளுடன் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புரசைவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் காலி ஆட்டோக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் நெருக்கம் குறைந்த இடத்தில் கடந்து வந்து, தங்களுக்கான ஆட்டோ பயணத்தை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. CIT நகர் வழியாக தி.நகருக்கு செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பு வரை அனுமதிக்கப்பட்டு, பின்பு இடதுபுறம் திரும்பி முத்துரங்கன் சாலை வழியாக உஸ்மான் ரோடு வரை செல்லலாம். நெரிசல் குறைந்த சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் சோமசுந்தரம் பூங்கா தியாகராய ரோடு, தணிகாசலம் ரோடு, மகாலட்சுமி தெருவில் உள்ள நாச்சியார் சாலை மற்றும் மோதிலால் தெருவில் உள்ள இரண்டு சக்கர வாகன நிறுத்தம் போன்ற நிறுத்தங்கள் போக்குவரத்து காவல்துறையால் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேற்கண்ட நிறுத்தங்களை பயன்படுத்தி வாகன நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புரசைவாக்கத்தில் நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களான நாராயணகுரு சாலையில் உள்ள மாநகராட்சி திடல், அழகப்பா ரோட்டில் உள்ள ஈவார்ட்ஸ் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலை ரோட்டில் ஈ.எல்.எம் பள்ளி திடல் மற்றும் ஜி.இ கோவில் தெரு போன்ற இடங்களில் போக்குவரத்து காவல்துறையால் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த நிறுத்தங்களில் தங்களது வாகனத்தை நிறுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
கோயம்பேடு வரும் பஸ் பயணிகள்அங்குள்ள வாகன நெரிசலை குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்து உதாரணமாக சென்னை மெட்ரோ, சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்து தங்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட போக்குவரத்து ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புநல்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்: போக்குவரத்து காவல் துறை appeared first on Dinakaran.