×

அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதற்காக தற்போது நான் வருத்தப்படுகிறேன்: நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அரசு பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசிய வழக்கில் மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜ பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அப்போது, மாங்காடு காவல்நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, ரஞ்சனா நாச்சியார், இன்று காலை மாங்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நடிகர் சங்கம் எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை. என்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள் யாரும் எனக்கு துணை நிற்கவில்லை. மாணவர்களை தாக்கியதற்காக தற்போது நான் வருத்தப்படுகிறேன். பிள்ளைகளின் பெற்றோருக்கு எனது தொலை பேசி எண்ணை கொடுத்துள்ளேன்.

நான் பாஜ நிர்வாகி என்பதாலேயே கைதாகி உள்ளேன். சமூக வலைதளங்களில் நான் வெளியிட்ட வீடியோ குறித்து தற்போது அவதூறாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். ‘நான் ஒரு நடிகை என்பதைவிட பாஜ கட்சி நிர்வாகி என்பதால் எனக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். விரைவில் தமிழகத்தில் மூடிய கதவுகளுடன் கூடிய பஸ்சில் மாணவர்கள் பயணம் செய்வதை பார்ப்பீர்கள். அதற்கு நான்தான் காரணம் என தெரியும்’ என்றார்.

The post அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதற்காக தற்போது நான் வருத்தப்படுகிறேன்: நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ranjana Nachiar ,Kunrathur ,Kunradthur ,
× RELATED தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி