×

எங்களுடைய பிணை கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது: இஸ்ரேல் பிரதமர் ட்வீட்

டெல்அவிவ்: பிணை கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7ம் தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி தாக்குதலில், 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பிணை கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வீரர்கள் காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனை உள்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இஸ்ரேல் படையினர் போர் ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர். இதேபோன்று, ராக்கெட் வீச்சு மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திய பள்ளி ஒன்றையும் தகர்த்தனர். அந்த பள்ளியில் இருந்த ராக்கெட் ஏவும் குழிகள், பல்வேறு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் தாக்கி அழித்தனர். தவிர, பீரங்கி குண்டுகள் மற்றும் பீரங்கியை அழிக்கும் ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் ஆகியவையும் தாக்குதலில் அழிக்கப்பட்டன. இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், சுரங்க பகுதிகளில் நீண்டகாலம் தங்கி இருப்பதற்காக எதிரிகள் தயாராகி வருகின்றனர் என்பது தெரிகிறது. சுரங்கங்களில் உள்ள நீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களுடைய பிணை கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம். தெற்கு இஸ்ரேலில் எங்களுடைய சமூக கட்டமைப்புகளை மீண்டும் அமைத்து, எங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வதற்கான விசயங்களை மேற்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘எக்ஸ்’ ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள பதிவில், காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. இதுவரை ஹமாஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அந்த குழு, மற்ற வீரர்களுடன் இணைந்து காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் சுரங்க நிலைகளின் இருப்பிடங்களை கண்டறிவது, அதனை வெடிவைத்து தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

The post எங்களுடைய பிணை கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது: இஸ்ரேல் பிரதமர் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : PM ,Tel Aviv ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!