×

நகராட்சி வார்டு, பள்ளிகளில் மழைகால நோய்களை கட்டுப்படுத்த முகாம்

 

காரைக்குடி, நவ.9: காரைக்குடி நகராட்சியில் மழைகால நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா வரவேற்றார். ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை துவக்கிவைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வியை, மருத்துவத்தையும் இரண்டு கண்கள் என அறிவித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவத்துறை மகத்தான வளர்ச்சியடைந்து வருகிறது. முதல்வரின் அறிவுரையின்படி இந் நகராட்சியில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் சிறப்பு நிதி பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் அறிவிப்பின்படி நகர்நல மையங்கள் துவங்கப்பட்டு சிறப்பாக மக்கள் சேவையாற்றப்பட்டு வருகிறது. மழைகால நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இதன்படி வார்டு பகுதி மற்றும் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. கொசு புழு ஆய்வு பணியாளர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

டயர் உள்பட தண்ணீர் தேங்கும் தேவையற்ற பொருட்கள் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் கொசு புழு வளர்வதை கட்டுப்படுத்த கிணறு மற்றும் குளங்களில் கம்போசியா மீன்கள் விடப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட கிணறுகள், குளங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்போசியா மீன்கள் விடப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றார். நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நகராட்சி வார்டு, பள்ளிகளில் மழைகால நோய்களை கட்டுப்படுத்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaikudi Municipality ,Urban Welfare ,Ward ,Dinakaran ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்