×

தீபாவளியையொட்டி இன்று முதல் 3 நாட்கள் ஆம்னி பஸ்கள் வடபழனி, தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்லாது: கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் ஏறலாம்

சென்னை, நவ. 9: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (9ம் தேதி) மற்றும் 10, 11ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர நகரின் 5 இடங்களில் இருந்து அதாவது மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவுபடி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில், சங்கம் நிர்ணயித்த கட்டணத்துக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள், ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளியையொட்டி இன்று முதல் 3 நாட்கள் ஆம்னி பஸ்கள் வடபழனி, தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்லாது: கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் ஏறலாம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Vadapalani ,Tambaram Perungalathur ,Koyambedu ,Klambakku ,Chennai ,Vadapalani, ,Klambakk ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!