×

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ₹10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை

செங்கல்பட்டு, நவ. 9: சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்களின்றி ₹10 லட்சம் ஹவாலா பணம் எடுத்து சென்ற வாலிபர் ஒருவரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் காலை நேரங்களில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வது வழக்கம். அதேபோல், நேற்று காலை திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், குறிப்பிட்ட பெட்டியில் ஒருவர் சந்தேக நிலையில் பயணிப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை 9 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய செங்கல்பட்டு ரயில் நிலையத்தை சோழன் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் எஸ்ஐ தேசி, காவலர் குமாரவேல் மற்றும் ரயில்வே குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஏறி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் கையில் பையை இறுகப் பிடித்தபடி பதற்றத்துடன் இருப்பதை போலீசார் பார்த்தனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பையை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அந்த பைக்குள் எவ்வித ஆவணங்களுமின்றி ₹10 லட்சம் ஹவாலா பணம் எடுத்து செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர், அந்த பணத்தை பறிமுதல் செய்து, சந்தேக நிலையில் இருந்த நபரையும் செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்நபர் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த முகமது ஹாசன் என்பவரின் மகன் ஹாஜா மொய்தீன் (36) பட்டதாரி எனத் தெரியவந்தது. மேலும், இவர் சென்னை மண்ணடி பகுதியில் தங்கி சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். முதல் கட்ட விசாரணையில் பகுதி நேர வேலையாக சென்னையில் இருந்து ரயிலில் ஹவாலா பணத்தை கொண்டு சென்று கொடுத்தால் ₹2 ஆயிரம் முதல் ₹3 ஆயிரம் வரை பணம் கிடைப்பதால் இந்த வேலை செய்து வருவதாக ரயில்வே போலீசாரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும், யார் இந்த பணத்தை கொடுக்க சொல்லி தன்னிடம் ெகாடுத்தது என்ற விவரம் தனக்கு முழுமையாக தெரியாது எனவும் மறுத்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து சிதம்பரத்தில் உள்ள ஒரு நபரிடம் ₹10 லட்சம் பணத்தை ஒப்படைக்க விரைவு ரயிலில் சென்றபோது செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தான் போலீசாரிடம் சிக்கியதாக விசாரணையில் கூறியுள்ளார். இதனை அடுத்து, ₹10 லட்சம் ஹவாலா பணத்தையும் சென்னை வருமானவரி துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரி பாலச்சந்திரனிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். மேலும், அதிகாரிகள் பிடிபட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ₹10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu train station ,Chengalpattu ,Chozhan Express ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!