×

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ..25.35 கோடியில் கட்டிய தடுப்பணை வெடி வைத்து முற்றிலும் தகர்ப்பு: தளவானூர் மக்கள், விவசாயிகள் நிம்மதி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் ரூ.25.35 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை வெடி வைத்து முற்றிலும் தகர்க்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை  சார்பில் ரூ.25.35 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. திறக்கப்பட்ட 3 மாதத்தில் ஜனவரி 23ம் தேதி தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. 3 மதகு ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 9ம்தேதி 2வது முறையாக உடைப்பு ஏற்பட்டது. பின்னர் மதகுகள் அருகே உள்ள மண்கரைகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தற்போது சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்ட கரையின் வழியாக ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் நிலவியது. இதைத் தொடர்ந்து கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் இந்த அணையை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் 100 ஜெலட்டின், 200 தோட்டாக்களை கொண்டு தகர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேற்று 2 வதுநாளாக இந்த பணி நடைபெற்றது. பாறைகளை வெடிவைத்து உடைக்கும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டனர். டிரில்லர் மெஷின்மூலம் சுவரில் துளையிட்டு அதில் ஜெலட்டின் குச்சிகள் பொருத்தப்பட்டன. பணிகள் முடிந்தநிலையில் மாலை 3.30 மணியளவில் வெடிவைத்து தடுப்பணை முற்றிலும் தகர்க்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தடுப்பணை தகர்க்கப்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் திரும்பாமல், ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே புதிய தடுப்பணை கட்டக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனக்கூறி அவர்களை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.* ஒரு கி.மீ வரை அதிர்ந்த வெடிசத்தம்நேற்று 2 வதுநாளாக வெடிவைத்து தடுப்பணையை தகர்க்கும் பணி நடந்தது. கூடுதலாக வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதுகாப்பு கருதி அணைகட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் வெடிவைத்தபோது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பயங்கர சத்தம் கேட்டது. அருகில் உள்ள வீடுகளிலும் அதிர்வுகள் எதிரொலித்தது. …

The post கடந்த அதிமுக ஆட்சியில் ரூ..25.35 கோடியில் கட்டிய தடுப்பணை வெடி வைத்து முற்றிலும் தகர்ப்பு: தளவானூர் மக்கள், விவசாயிகள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Talavanur ,Villupuram ,Talavanur Tenpenna river ,
× RELATED பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு