×

ஆதிவாசிகளின் வளர்ச்சியில் பாஜவுக்கு விருப்பம் இல்லை: சட்டீஸ்கர் கூட்டத்தில் ராகுல் கடும் தாக்கு

அம்பிகாபூர்: ஆதிவாசிகள் வளர்ச்சியில் பாஜவுக்கு விருப்பம் கிடையாது,அதனால்தான் அவர்களை வனவாசி என்று அழைக்கின்றனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,‘‘ மபியில் ஆதிவாசி இளைஞர் மீது பாஜ பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்த சம்பவத்தின் மூலம் பாஜவினரின் மனநிலையை புரிந்து கொள்ளலாம்.

ஆதிவாசி மக்கள் ஆங்கிலம் கற்பதை பாஜவினர் எதிர்க்கின்றனர். ஆங்கிலம் கற்று பெரிய கனவுகளை காணக்கூடாது என்பதற்காகதான் ஆதிவாசிகளை வனவாசிகள் என்று பாஜவினர் அழைக்கின்றனர். வனவாசி என்ற சொல் இழிவுபடுத்தும் சொல். மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் தான் ஒரு பிற்படுத்தப்பட்டவர்(ஓபிசி) என கூறுகிறார். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தால், நாட்டில் ஏழை என்ற ஒரே சமுதாயம் தான் உள்ளது என்றார். பிறகு எதற்காக அவர் தன்னை ஓபிசி என கூற வேண்டும்’’ என்றார்.

பொது துறை நிறுவனங்கள் விற்பனை: மபி மாநிலம் சான்வர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘பிரதமர் நேரு ஆட்சியில் ஐஐஎம்,எய்ம்ஸ் உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல பொது துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாஜ ஆட்சியில் பொது துறை நிறுவனங்கள் பிரதமரின் தொழிலதிபர் நண்பர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. 70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என மோடி சொல்கிறார்.

மோடி படித்த பள்ளிக்கூடம் காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டது. அவர் கல்லூரியில் படித்தாரா என்பது தெரியவில்லை. அவருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் எல்லாம் காங்கிரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ராஜிவ் காந்தி கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கொண்டுவந்த போது இவரை போன்ற வர்கள் எதிர்த்தனர்’’ என்றார்.

 

The post ஆதிவாசிகளின் வளர்ச்சியில் பாஜவுக்கு விருப்பம் இல்லை: சட்டீஸ்கர் கூட்டத்தில் ராகுல் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul ,Chhattisgarh ,Ambikapur ,Rahul Gandhi ,Adivasis ,Dinakaran ,
× RELATED 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற...