×

உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்: 2024ம் ஆண்டு ஜனவரிக்குள் வழங்க இலக்கு; பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் பாதுகாப்பட்ட குடிநீர், வீட்டுக் குழாய் இணைப்பு மூலம் 2024க்குள் வழங்குவதற்காக ‘உயிர் நீர் இயக்கம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டமானது நீடித்த நிலைத் தன்மை உடைய நீராதாரங்களை தேர்ந்தெடுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள நீராதாரங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்யப்படுகிறது. மேலும் தேவைப்படும் இடங்களுக்கு அதிக அளவு நீரினை குழாய்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பகிர்மான குழாய்களின் அமைப்பை ஏற்படுத்தப்படுகிறது.

அனைத்து ஊரக வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பிலுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்த இயக்கத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் 50% நிதியும், மாநில அரசு சார்பில் 50% நிதியையும் வழங்கி வருகிறது. இதனிடையே இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ள 125.48 லட்சம் வீடுகளில் இதுவரை 92.94 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றின் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் வீடுதோறும் குடிநீர் வழங்கும் மாவட்டங்கள் என சான்றளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராம ஊராட்சிகளில் 4,658 கிராம ஊராட்சிகளுக்கு 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 4,658 கிராம ஊராட்சிகள் வீடுதோறும் குடிநீர் வழங்கும் கிராம ஊராட்சிகள் என அறிவிக்கப்பட்டு, அவற்றில் 2,561 கிராம ஊராட்சிகளில் வீடுதோறும் குடிநீர் வழங்கும் கிராம ஊராட்சிகள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அதிகாரி கூறியதாவது: ஒற்றை கிராமத் திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் கொடுக்கப்பட வேண்டிய வீட்டுக் குழாய் இணைப்புகள் அனைத்தும் இம்மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு அதிகமான குழாய் இணைப்புகள் வழங்கியுள்ள திருவள்ளூர், தேனி, நாமக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கோவை என 17 மாவட்டங்களில் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் மாவட்டத்திற்குள் வீடுதோறும் குடிநீர் வழங்கும் மாவட்டங்கள் என அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் நிதி இல்லாமல், இதர திட்ட நிதிகளின் மூலம் முடிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் ஊரக பகுதிகளுக்கு வீட்டு குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு 15வது நிதிக்குழு மானியம் மற்றும் மாவட்டம் கனிமவள நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானியம் போன்ற நிதிகளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022-23ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் ஒற்றை கிராம திட்டத்துக்கு ரூ.483.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 34 சதவீதமாக ரூ.164.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்துக்குகு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் குறைவான அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறைந்த சதவீதத்தில் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ள மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி 100 சதவீத திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* குடிநீரின் தர ஆய்வு
ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பயிற்சி பெற்ற மகளிர் மூலம் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளில் குடிநீரின் தரத்தினை கள ஆய்வு பரிசோதனை பெட்டி (field test kit) மூலமாக ஆய்வு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

* சமூக வலைதளங்களில் பதிவு
டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கி சான்றளித்துள்ள கிராமங்கள் மற்றும் இதர முக்கியமான ஜல் ஜீவன் திட்டத்தின் சாதனைகளைப் பதிவிட வேண்டும்.

* குடிநீர் குழாய் நண்பன்
குடிநீர் குழாய் நண்பன் திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிளம்பிங், மின்பணிகள், கட்டுமான பணிகள், மோட்டார் இயக்குதல் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு உரிய பயிற்சி அளித்து உள்ளூர் குடிநீர் திட்டங்களின் இயக்கம் மற்றும் பராமரித்தல் பணிகளுக்கு தகுதிப்படுத்துவது ஆகும்.

100% வீட்டுக்குழாய் இணைப்பு வழங்கிய மாவட்டங்கள் விவரம்
மாவட்டம் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குடிநீர் குழாய்
இணைப்புகள் சதவீதம்
கன்னியாகுமரி 216738 216738 100%
வேலூர் 212528 212528 100%
ராணிப்பேட்டை 189334 189334 100%
காஞ்சிபுரம் 216311 216311 100%
குறைந்த சதவீத வீட்டுக்குழாய் இணைப்பு வழங்கிய மாவட்ட விவரம்
மாவட்டம் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குடிநீர் குழாய்
இணைப்புகள் சதவீதம்
தர்மபுரி 342902 143352 42%
சிவகங்கை 332608 139218 42%
ராமநாதபுரம் 333286 83735 25%
நாகப்பட்டினம் 157427 27268 17%

The post உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்: 2024ம் ஆண்டு ஜனவரிக்குள் வழங்க இலக்கு; பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...