×

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில் ‘பேலியேட்டிவ் கேர்’ படிப்பு தொடங்கப்படும்: துணைவேந்தர் நாராயணசாமி தகவல்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டில் ‘பேலியேட்டிவ் கேர்’ பட்ட படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை தொடங்க இருப்பதாக பல்கலை கழக துணைவேந்தர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பேல்லியேடிவ் கேர் என்பது மரணவலி தணிப்புச் சிகிச்சை முறையாகும். தீரா நோய்களால் மரணத் தறுவாயை நெருங்கிய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவை கொண்ட பல்நோக்கு மருத்துவ அணுகுமுறை ஆகும். நோயாளிகளுக்கு ஏற்படும் வலி, மன அழுத்தம், நோய் உணர்குறி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் இந்திய அளவில் புகழ்பெற்ற பேல்லியம் இந்தியா, திருவனந்தபுரம் இணைந்து மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்த ஒருநாள் பயிலரங்கத்தை நேற்று நடத்தியது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேலியேட்டிவ் கேர் அமைப்பின் தலைவர், எம்ரிட்டஸ் பத்ம ராஜகோபால் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கூறுகையில், ‘‘மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் சிகிச்சை பிரிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, இப்பல்கலைக் கழகத்தில் முதன் முறையாக, இளநிலையில் பி.எஸ்.சி (பேலியேட்டிவ் கேர்) என்ற பட்டப்படிப்பும், முதுநிலையில் எம்.டி. (பேலியேட்டிவ் கேர்) என்கின்ற பட்டமேற்படிப்பும் அடுத்து வரும் கல்வி ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு தெரியவரும். மேலும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், “பேல்லியம் இந்தியா” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பயிலரங்கில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன், தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும் மேற்பட்ட மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், மருந்தியல், செவிலியர் என பல பிரிவுகளை சார்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

The post டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில் ‘பேலியேட்டிவ் கேர்’ படிப்பு தொடங்கப்படும்: துணைவேந்தர் நாராயணசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Dr. ,M.G.R. ,College ,Vice ,Narayanasamy ,Chennai ,Tamil Nadu ,University ,Chancellor ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!