×

ஸ்டோக்ஸ் 108, மலான் 87 ரன் விளாசல் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து: நடப்பு சாம்பியனுக்கு 2வது வெற்றி

புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 160 ரன் வித்தியாசத்தில் வென்றது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர்.

பேர்ஸ்டோ 15 ரன் எடுத்து ஆர்யன் பந்துவீச்சில் மீகரன் வசம் பிடிபட்டார். அடுத்து மலான் – ஜோ ரூட் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். ரூட் 28 ரன் எடுத்து வான் பீக் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, மலான் 87 ரன் (74 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். ஹாரி புரூக் 11, கேப்டன் பட்லர் 5, மொயீன் அலி 4 ரன் எடுத்து அணிவகுக்க, இங்கிலாந்து 192 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் கிறிஸ் வோக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது.

வோக்ஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ஸ்டோக்ஸ் நெதர்லாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்து அசத்தினர்.
வோக்ஸ் 51 ரன் (45 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் வில்லி 6 ரன் எடுத்து பாஸ் டி லீட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஸ்டோக்ஸ் 108 ரன் எடுத்து (84 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) வான் பீக் பந்துவீச்சில் எங்கல்பிரெக்ட் வசம் பிடிபட்டார்.

இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. அட்கின்சன் 2, அடில் ரஷித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 3, ஆர்யன் தத், வான் பீக் தலா 2, வான் மீகரன் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. வெஸ்லி, மேக்ஸ் ஓ தாவுத் இணைந்து துரத்தலை தொடங்கினர். மேக்ஸ் ஓ 5 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஆக்கர்மேன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.ஓரளவு தாக்குப்பிடித்த வெஸ்லி 37 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சைப்ரண்ட் 33 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பாஸ் டி லீட் 10 ரன் எடுத்து ரஷித் சுழலில் கிளீன் போல்டாக, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன் எடுத்து மொயீன் அலி சுழலில் மலான் வசம் பிடிபட்டார். வான் பீக் 2, வாண்டெர் மெர்வ் 0, ஆர்யன் தத் 1 ரன், வான் மீகரன் 4 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, நெதர்லாந்து 37.2 ஓவரிலேயே 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தேஜா நிடமனுரு 41 ரன்னுடன் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி, அடில் ரஷித் தலா 3 விக்கெட், டேவிட் வில்லி 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 160 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து கவுரவமாக 7வது இடத்துக்கு முன்னேறியது. ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post ஸ்டோக்ஸ் 108, மலான் 87 ரன் விளாசல் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து: நடப்பு சாம்பியனுக்கு 2வது வெற்றி appeared first on Dinakaran.

Tags : Stokes ,Malan ,Vlasal England ,Pune ,ICC World Cup ODI ,Netherlands ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து