×

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம்

கோவை: கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநர் கீதா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

“கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காத படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு நெறி முறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில்கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன் படி, ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும். ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ராகிங் பெட்டி, ஆலோசனை பெட்டியினை அமைத்து ராகிங் கொடுமையினை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறைத் தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டின் அரசு கடிதத் தில் குறிப்பிட்டுள்ளவாறு. மராட்டிய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ்துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ‘ராகிங்’ குழுக்கள் அமைக்க வேண்டும். இது தொடர்பாக ஆய்வு செய்து, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒருவாரத்துக்குள் அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும், ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டக் கூடாது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் appeared first on Dinakaran.

Tags : Goa ,College Education Drive ,Dinakaran ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...