×

டச் அண்ட் ஃபீல் ஃபாஸ்ட் மூவிங் சாரீஸ்…

நன்றி குங்குமம் தோழி

கணவனும் மனைவியுமாக கைகோர்த்து தொழிலை நடத்தினால் வெற்றிதான் என்பதற்கு நாங்களே சாட்சி. நாங்கள் கபுள் தொழில்முனைவோர் என கைகோர்த்தபடி
புன்னகைத்து வரவேற்றவர்கள் தமிழரசி, சபரிநாத் ஜோடி.ஆர்ரா பொட்டிக் எனப்படும் இவர்களின் சேலை விற்பனைத் தொழிலுக்கு கணவனும் மனைவியுமே மாடல்ஸ். பின்னணியில் திரையிசைப் பாடல்கள் ஒலிக்க நடிப்பு… டிஸ்பிளே… விற்பனை… பேக்கிங் என கலர்ஃபுல் விளம்பரங்களாக… ரொமான்ஸாக…

பிரசென்டபிளாக என கலந்துகட்டி இவர்களின் இன்ஸ்டா பக்கம் ரீல்ஸ்களால் நிரம்பி வழிகிறது.‘‘என்னைவிட அவருக்குதான் ஃபேன்ஸ் ஆஃப் பாலோவர்ஸ் அதிகம். “நீங்க பார்க்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, அழகா இருக்கீங்கன்னு” கமென்ட்ஸ் அவருக்கு நிறையவே வருகிறது. பெண்கள் அவரைப் புகழும்போது பொறாமை லைட்டா எட்டிப் பார்க்கும்தான். ஆனால் என்ன செய்யுறது. நம்மளோட பிஸினஸ் அதைவிட முக்கியம் இல்லையா?’’ கணவர் சபரியை பார்த்து கேலியும்… கிண்டலும்… காதலுமாக கண் சிமிட்டியபடி பேச ஆரம்பித்தார் ஆர்ரா பொட்டிக் இயக்குநர் தமிழரசி.

‘‘எனக்கு ஊர் நெய்வேலி. நான் பக்கா தமிழ்ப் பொண்ணு. அவருக்கு ஊர் பெங்களூர் என்றாலும் இருப்பது ஓசூர். அவருக்கு தாய் மொழி கன்னடம். இஞ்சினியரிங் படித்தபோது லவ்வாகி நிறைய நிறைய எதிர்ப்புகளுக்கு நடுவில் எங்களின் திருமணம் முடிந்தது. காரணம், மாநிலம், மொழி, சாதின்னு எல்லாமே எங்களுக்குள் வேறுவேறு. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் பார்த்த ஐடி வேலையை விட்டுவிட்டு இருவருமாக ஓசூர் வந்து செட்டிலாகி 6 வருடம் ஆச்சு. இப்ப ஒரு குழந்தையும் இருக்கு.

ஆன்லைன் பிஸினஸ் பொறுத்தவரை எங்களின் விற்பனை பெரும்பாலும் இன்ஸ்டாவில்தான். துவக்கத்தில் டிக்டாக் தம்பதிகளாக இணையத்தில் வலம் வந்தபோது, எங்களுக்கு ஃபேன் ஆஃப் பாலோவர்ஸ் அதிகம். அரசாங்கம் டிக்டாக் ஆப்பிற்கு ஆப்பு வைத்தபோது, நாங்கள் ஜோடியாக இன்ஸ்டாவில் மையம் கொண்டோம். இப்ப இன்ஸ்டா பக்கத்தில் 200 கே, எஃப்.பி. பக்கத்தில் 70 கே பாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள்’’ என்ற தமிழரசியின் கண்கள் துறுதுறுவென எப்போதுமே அபிநயம் பேச, காரணம் கேட்டபோது…

‘‘பேஸிக்கலி நான் கிளாசிக்கல் டான்ஸர். ஓசூர் வந்த பிறகு, கிளாசிக்கல் வகுப்புகளை எடுக்கத் தொடங்கி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் பிஸினஸுக்குள் என்னை நகர்த்தினேன். பிஸினஸ் சூடு பிடிக்க, சின்னதாக பொட்டிக் ஒன்றை பார்ட்னர்ஷிப்பில் ஆரம்பித்தேன். பார்ட்னர்ஷிப் எனக்கு சுத்தமாக செட்டாகவில்லை. தனியாகத் தொழிலை நடத்தலாம் என முடிவெடுத்தபோது, கணவர் சபரிஷ் முழுமையாக எனக்குத் தோள் கொடுத்தார்.

ஹேண்ட்லிங் த கஸ்டமரில் தொடங்கி…சேலையை மடித்து வைப்பதுவரை அவர் ரொம்பவே பெர்பெக்ட்’’ என கணவரை பெருமையாய் பார்த்து புன்னகைத்த தமிழரசி, ‘‘ஆனால் சேலை விற்பனைக்கான ஐடியாக்கள் எல்லாமே என்னுடையது’’ என தம்ஸ்அப் காட்டியவர், ‘‘அடுத்தவுங்கள
ஈர்க்குற மாதிரி, ஒரு விஷயத்தை பிரசென்டபிளாக செய்வது ஒரு கலை. அது எனக்கு நல் லாவே வரும். காரணம், நான் டான்ஸர்.

டக்குன்னு நம்மல திரும்பிப் பார்க்கணும்னா யாருமே பண் ணாத ஒன்றை நாம வித்தியாசமாக செய்யணும் இல்லையா’’ என்றவர், ‘‘எனக்குத் தெரிந்து கணவன்-மனைவியா ஜோடியா ரீல்ஸ்ல சேலைகளை விளம்பரம் செய்து விற்கும் ஜோடி நாங்களாகத்தான் இருப்போம். ரீல்ஸ் போடுவதிலும் நிறைய வித்தியாசங்களை புகுத்தி ரசிக்கிற மாதிரி செய்ய ஆரம்பித்தோம்.

எப்பவும் எதையும் காப்பி பண்ணி செய்வதற்கு நான் விரும்புவதில்லை. நான் செய்கிற விஷயம் ரொம்பவே தனித்துவமா, இதுவரை யாரும் செய்யாததாக இருக்க வேண்டும் என்றே யோசிப்பேன். என் மைன்டிற்கு படுவதை என்னோட ஸ்டைலில் வெளிப்படுத்தியதில், நாங்கள் போடுகிற ரீல்ஸ் பலரையும் கவர ஆரம்பித்து, நாங்கள் போடுகிற ரீல்ஸ்களால் ஆன்லைன் விற்பனை வேற லெவலில் எனக்கு ஹிட் கொடுக்க ஆரம்பித்தது. சேலை விற்பனையை வேற கட்டத்தை நோக்கி நகர்த்தியதில் அதுவும் வேகமெடுக்க ஆரம்பித்தது.

ஓசூரில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசுகிற மக்கள் அதிகம். அவருக்கு தெலுங்கும் கன்னடமும் நன்றாக பேசத் தெரியும். நான் தமிழில் சொல்வதை அவர் கன்னடம், தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தார். இதனால் தமிழ்நாடு தாண்டி, பெங்களூரு, ஹைதராபாத் மாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள்.எங்களின் இன்ஸ்டா ரீல்ஸ் வெளிநாடுகளிலும் வைரலாக, ஆன்லைன் கஸ்டமர்கள் இந்தியா தாண்டி, யு.எஸ்., கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். வேர்ல்ட் ஆஃப் மவுத்தில் ரீல்ஸ் பார்த்து, ரெகுலர் கஸ்டமர்களாக மாறிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், சேலைகளை மொத்தமாக பண்டல் பண்டலாக வாங்கி, நம் பண மதிப்பைவிட 3 அல்லது 4 மடங்கு விலை அதிகம் வைத்து அவர்கள் வசிக்கும் நாடுகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

அதேபோல், ஆஃப் லைனிலும் எங்களைத் தெரியாதவர்களே ஓசூரில் கிடையாது. எங்களுடைய ஆர்ரா பொட்டிக் கோயம்புத்தூர் ஸ்டைலில், வின்டேஜ் டைப்பில் பார்க்க ரொம்பவே அசத்தலாகவே இருக்கும். கடைக்கு சேலை வாங்க சென்றால் அங்கு எல்லாவிதமான சேலைகளும் குவிந்து கிடக்கும். எதை எடுப்பது எதை விடுவது எனத் தெரியாமல் குழம்பி நேரம் விரயமாகும். ஆனால் எங்கள் பொட்டிக்கில் இன்றைய டிரென்டிற்கு ஏற்ப கலெக் ஷன்ஸ் யுனிக்காக இருக்கும்.

என் பொட்டிக்கோட பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மூவிங்ஸ் சாரீஸ்தான். ஒரு நேரம் கலம்ஹாரி மட்டுமே விற்பனையில் சூடு பிடித்தது. பிறகு பின்னி சில்க்ஸ். பிறகு டோலா சில்க்ஸ். எது இப்போதைய டிரென்ட் என்பது எனக்கு சேலை விற்பனையில் அத்துப்படி. குறிப்பிட்ட கலெக் ஷனில் செலக்டிவ் கலராக கஸ்டமர் பல்ஸ் தெரிந்து நிறைவாகவே வைத்திருப்போம். 300 ரூபாயில் தொடங்கி 25 ஆயிரம் வரை சாரி கலெக் ஷன்ஸ் எங்களிடத்தில் கிடைக்கும். அட்ராக்டிவ் மற்றும் வைப்ரென்ட் கலர்ஸ்… வெரிவெரி ஷாப்ட் மெட்டீரியல்ஸ்… சாரி உடுத்தத் தெரியாதவர்களும் சுலபமாய் கட்டலாம்’’ என சாரி குறித்து நம்மிடம் தொடர்ந்து அடுக்கியவர்…

‘‘ஜீரோ நாலேஜில்தான் இந்தத் தொழிலை பொட்டிக் வடிவில் தொடங்கினேன். தொடங்கியதுமே ஹிட்டடிக்கக் காரணம், இதற்கு முன்பாக நான் செய்த ஆன்லைன் பிஸினஸ். எந்த சேலை எங்கு கிடைக்கும் என்பது தெளிவானதும், குவாலிட்டி பார்த்து மெட்டீரியலை தேர்வு செய்வதில் கில்லாடி ஆனேன். வாடிக்கையாளர் டேஸ்ட்டை பல்ஸ் புடிப்பதும் எனக்கு கைவந்தது. இவையெல்லாம் சாரி விற்பனை தொழிலுக்கு முக்கியமானதாக இருந்தது.

தமிழ்நாடு, ராஜஸ்தான், வெஸ்ட் பெங்கால்னு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேட்டன் சேலை புகழ் பெற்றது என்பதால், தெற்கில் தொடங்கி வடக்குவரை, இந்தியா முழுவதும் நாங்கள் இருவருமாக பயணித்து, எந்தெந்த ஊர் சேலையில், என்னென்ன சிறப்பு இருக்கு என்பதை அங்குள்ள நெசவாளர்களை அணுகி டச் அண்ட் ஃபீல் செய்து பார்த்த பிறகே மொத்தமாக கொள்முதல் செய்கிறோம். குறிப்பாக வடமாநிலங்களில் பீஹார், வாரணாசி, ஜெய்ப்பூரில் இருந்தெல்லாம் புடவைகளை தேடி கண்டுபிடித்து எடுத்து வருகிறோம்.

நெசவாளர்களிடத்தில் கொள்முதல் செய்வதற்கு முன்பாக தரம் மற்றும் கலர் போகிறதா என்பதை சேலையை வாங்கி, நான் உடுத்திப் பார்த்து, வாஷ் செய்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவோடு தேர்வு செய்து வாங்கி வருகிறேன்.என்னிடம் மல்மல் காட்டன், ப்யூர் லெனின் காட்டன், ஃபகல்புரி காட்டன், போச்சம்பள்ளி சில்க் காட்டன், ஆந்திரா ஸ்பெஷல் டிஸ்யூ காட்டன், உப்படா சாரி, ஆர்கென்ஷா சாரி, கோரா மஸின் சாரி, எலிகன்டா சாரி, பனாரஸ் சில்க் காட்டன், சந்தேரி, பாந்தினி, காஞ்சிபுரம்னு வெரைட்டியா புடவைகள் லேட்டஸ்ட் டிரென்டில் இருக்கிறது.

இத்துடன் ஆரி வேலைப்பாடுகள் செய்த ப்ளவுஸ் துணிகளை சேலையோடு மேட்ச் செய்து காம்போவாக்கிக் கொடுக்கிறோம்’’ என்ற தமிழரசி, ‘‘நான் ஆன்லைன் விற்பனையை கவனித்தால், என் கணவர் ஆஃப் லைன் விற்பனையை கவனித்துக் கொள்கிறார்’’ என்றவாறு சேலைகளை வாடிக்கையாளர்களுக்கு விரித்து மடித்து காட்டிக் கொண்டிருந்த சபரிநாதனை நோக்கி விரல் நீட்டினார்.‘‘நீங்களும் எங்களோட கபுள்ஸ் ரீல்ஸ் பாருங்க. கண்டிப்பா எங்கள் வாடிக்கையாளராக மாறிடுவீங்க…’’ புன்னகைத்து விடைகொடுத்தனர் இந்த ரீல்ஸ் கபுள்ஸ்.

The post டச் அண்ட் ஃபீல் ஃபாஸ்ட் மூவிங் சாரீஸ்… appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்