×

6வது வெற்றியுடன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி; மேக்ஸ்வெல் ஆட்டம் உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்று: கேப்டன் கம்மின்ஸ் பாராட்டு

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கன் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸி. 91 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் மேக்ஸ்வெல் நாட்அவுட்டாக 128 பந்தில், 21 பவுண்டரி, 10 சிக்சருடன் 201 ரன் விளாசினார்.

இதனால் 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றிபெற்றது. மேலும் தொடர்ச்சியாக 6வது வெற்றியுடன் அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதிபெற்றது. வெற்றிக்கு பின் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: இந்த போட்டி நம்ப முடியாத வகையில் இருந்தது. வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை. அந்த அளவிற்கு இது ஒரு அற்புதமான வெற்றி. இதுபோன்ற ஒரு நிகழ்வு எப்போதாவது தான் நடக்கும்.

நிச்சயம் ரசிகர்கள் இந்த போட்டியை பற்றி பேசுவார்கள். இந்த போட்டியில் நானும் களத்தில் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேக்ஸ்வெல் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அவர் நெருக்கடியான கட்டத்தில் கூட அமைதியாக இருந்தார். தோல்வியின் விளிம்பில் கூட அவர் ஒரு திட்டத்துடன் விளையாடினார். வெற்றிக்கு 200 ரன்னுக்கு மேல் தேவை என்ற நிலையிலும் அவர் பாசிட்டிவாக அணுகினார். அவரது இந்த ஆட்டம் உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்று. தசைபிடிப்பால் அவதிப்பட்டபோது அவரை பெவிலியனுக்கு அழைக்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் நான் கடைசிவரை களத்தில் நிற்பேன் என்று கூறிவிட்டார். எங்கள் அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது நாங்கள் அரை இறுதி சுற்றுக்கு சென்று விட்டோம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.

ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் கூறுகையில், நாங்கள் பீல்டிங் செய்யும்போது வெயில் அதிகமாக இருந்தது. இது போன்ற வெப்பமான இடத்தில் நான் அதிகமாக பயிற்சியை மேற்கொண்டது கிடையாது. இருந்தாலும் நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எங்கள் அணி ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தபோது எனது பேட்டிங் திட்டத்தை நான் தெளிவாக வைத்துக் கொண்டேன். அதாவது எந்த இலக்கையும் துரத்துவதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டு பாசிட்டிவாக விளையாடினேன். ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். ஆனாலும் என்னுடைய இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. என்னுடைய வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டதில் பெருமை அடைகிறேன், என்றார்.

ஒரே கேட்ச்சால் கோட்டை விட்டோம்: ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூறியதாவது:தோல்வி மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டுதான் ஆனால் எங்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது. நாங்கள் நன்றாக தொடங்கினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாங்கள் கைவிட்ட கேட்ச் வாய்ப்புகள் எங்களை ஆட்டத்தில் தோற்கடித்து விட்டது. மேக்ஸ்வெல்லுக்கு ஒரு கேட்ச் விட்டோம். அவர் அந்த இடத்திலிருந்து தன்னிடம் இருக்கும் எல்லா ஷாட்களையும் விளையாட ஆரம்பித்து விட்டார். அதற்கு மேல் அவரை எங்களால் நிறுத்தவே முடியவில்லை. இதற்கான மொத்த பெருமையும் அவருக்கே சேரும். பவுலர்கள் முடிந்த வரை போராடினர். ஆனாலும் மேக்ஸ்வெல் அதற்கு மேல் எங்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை, என்றார்.

சச்சின் பாராட்டு:
* இரட்டை சதம் அடித்த தொடக்கஆட்டக்காரர் இல்லாத முதல் வீரர், சேசிங்கில் இரட்டை சதம் விளாசிய முதல்வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார். 5 மற்றும் அதற்கு கீழ் களம் இறங்கி அதிக சதம் (3) அடித்தவரும் அவர் தான்.
* ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வாட்சனின் சாதனையை (185) மேக்ஸ்வெல் தகர்த்துள்ளார்.
* உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர்களில் கெய்ல் (49), ரோகித்சரமா (45) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் மேக்ஸ்வெல் (43) உள்ளார்.
* ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தாலும் 2025ல் சாம்பியன் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
* ஒரு அழுத்தமான சூழ்நிலையில் மேக்ஸ்வெல் விளையாடிய ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. அவரது இந்த இன்னிங்ஸ்தான் நான் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் என சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

The post 6வது வெற்றியுடன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி; மேக்ஸ்வெல் ஆட்டம் உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்று: கேப்டன் கம்மின்ஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Australia ,Maxwell ,Captain Cummins ,MUMBAI ,AFGHANISTAN ,WORLD CUP ,VANKADE STADIUM ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...