×

ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் தண்டவாளம் வழியே நோயாளியை தூக்கி சென்ற உறவினர்கள்: மேம்பால பணியை வேகமாக முடிக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்படுவதால், அவ்வழியே 108 ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் ஒரு நோயாளியை தண்டவாளம் வழியாக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இத்தகைய அவலநிலையை போக்க, அங்கு மந்தகதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதகதியில் முடிக்க ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே ஒரு ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியே திருக்கச்சூர், ஆப்பூர், வடகால், கொளத்தூர் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வரும் கட்டாய நிலை உள்ளது. மேலும் பெரும்புதூர், ஒரகடம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், இந்த ரயில்வே கேட் வழியாக ஏராளமான தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்கள், பேருந்து மற்றும் வேன்களில் சென்று வருகின்றனர்.

சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள ரயில்வே கேட் வழியாக சென்னை-செங்கல்பட்டு-சென்னை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு விரைவு, அதிவிரைவு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த ரயில்வே கேட் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடவேண்டிய சூழல் நிலவி வருகிறது. அந்த ரயில்வே கேட் நீண்ட நேரமாக மூடியே கிடப்பதால், அதன் வழியே அவசரகால ஊர்திகளான 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட வழியின்றி நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தீவிர நோய் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகள் உள்பட ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை திருக்கச்சூர், மலைமேடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அவரை சுயநினைவு இழந்த நிலையில், சிங்கபெருமாள்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், அங்குள்ள ரயில்வே கேட் நீண்ட நேரமாக மூடியிருந்ததால், சுயநினைவிழந்த நோயாளியை அவரது உறவினர்கள் தூக்கியபடி தண்டவாளத்தை கடந்து ஓடிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

இக்காட்சி அங்கு ரயில்வே கேட் திறப்பதற்காக காத்திருந்த ஏராளமான வாகன ஓட்டிகளை பதைபதைக்க வைத்தது. எனவே, சிங்கபெருமாள்கோவில்-திருக்கச்சூர் இடையே நீண்ட நேரமாக மூடியே கிடக்கும் ரயில்வே கேட்டை கடப்பதற்கு, தற்போது இப்பகுதியில் மெத்தனமாக நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் தண்டவாளம் வழியே நோயாளியை தூக்கி சென்ற உறவினர்கள்: மேம்பால பணியை வேகமாக முடிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...