×

ராகிங் கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது: கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

கோவை: கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த விவகாரத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரிடம் அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் அவரை ராகிங் செய்துள்ளனர். மாணவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீனியர் மாணவர்கள் சென்று அவரை தங்களின் அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவரை திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, மதுகுடிக்க பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக வந்த பெற்றோர், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதனிடையே தன் மகன் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர் ராகிங் சட்ட பிரிவு, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

The post ராகிங் கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது: கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWAI B. S. G. ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!!