×

4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயில் சேவை 4 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்ததால் சேதமடைந்தது.

தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்ததால் கடந்த 4, 5, 6ம் தேதிகளில் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் (7ம் தேதி) மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து துவங்கியது. 184 பயணிகளுடன் ஊட்டி மலை ரயில் இன்று காலை 7.10 மணியளவில் புறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.

இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், நீண்ட நாட்களாக ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என ஆவலில் காத்திருந்தோம். நல்வாய்ப்பாக இன்று மலை ரயில் சேவை தொடங்கியதால், இதமான சூழல், பசுமையான பள்ளத்தாக்குகளை இந்த பயணம் மூலம் கண்டுகளிக்க உள்ளோம்’ என்றனர்.

The post 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Ooty Mountain train service ,Matuppalayam ,Ooty Mountain train ,Methuppalayam ,Goa District ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!