×

பட்டிவீரன்பட்டி பகுதியில் முதல்போக நெல் நடவு பணி மும்முரம்

*வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முதல் போக நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டை, போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், அழகர்நாயக்கன்பட்டி, சித்தரேவு, நெல்லூர் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், மருதாநதி அணையில் இருந்து இப்பகுதி முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,359 ஏக்கர் பழைய பாசன நிலங்கள், 4151 ஏக்கர் புதிய பாசன நிலங்கள் என மொத்தம் 6,583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

தற்போது அணையின் நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பெரியாறு வழியாக நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில், சித்தையன்கோட்டையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து உள்ளது. இதனால், விவசாயிகள் வயல்களை உழவு செய்தல், நாற்றாங்கால் அமைத்தல், நெல் நாற்று நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நேரடி விதைப்பு மூலம் முதல்போக நெல் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பட்டிவீரன்பட்டி பகுதியிலுள்ள கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது கண்மாய் மற்றும் வாய்க்கால்களில் வரும் நீரை பயன்படுத்தி முதல்போக நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளோம். நாற்றுகள் வளர்ந்த இடங்களில், நடவு பணி நடக்கின்றது. கோ 50 மற்றும் கோ 51 ஆகிய நெல் ரகங்களை நடவு செய்கிறோம். இவை 130 நாட்கள் முதல் 135 நாட்களில் விளையும்’ என்றனர்.

The post பட்டிவீரன்பட்டி பகுதியில் முதல்போக நெல் நடவு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,North-East ,Dinakaran ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே புதர்மண்டி...