×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 54.55 அடியாக உயர்ந்தது

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாகவும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6498 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததாலும் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிய தொடங்கியது.

இந்நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,238 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,702 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,498 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 53.53 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 54.55 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 20.79 டிஎம்சியாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 54.55 அடியாக உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Okanagan ,Mettur Dam ,Bennagaram ,Okenakal Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு