×

இறுதிக்கட்ட தீபாவளி பொருட்கள் விற்பனை நெல்லை டவுன் கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்

*காவலர்கள் பற்றாக்குறையால் திணறல்

கேடிசி நகர் : நெல்லை டவுனில் பொதுமக்கள் இறுதி கட்ட தீபாவளி பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் போலீசார் பற்றாக்குறை காரணமாக பாதுகாப்பு பணியில் போலீசார் திணறி வருகின்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 12ம்தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நெல்லை டவுனில் ஏராளமான ஜவுளிக்கடைகள், சாலையோர கடைகள், பாத்திர கடைகள், ஆடை அணிகலன்கள் விற்பனை கடைகள் உள்ளன.

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைகால பொருட்களான ஜவுளி, மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு, ஆடை அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் நெல்லை டவுன் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் பலத்த பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நெல்லை டவுன் காவல் நிலையத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள், பணி மாறுதல் காரணமாக சுமார் 15 காவலர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களிலும் இதேநிலை நீடிக்கிறது. இதனால் காவலர்கள், வாரஓய்வு எடுக்க முடியாமல் கூடுதல்நேரம் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பண்டிகை கால பாதுகாப்பு பணியில் ஊர்க்காவலர் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை.

தீபாவளி பண்டிகைக்கும் சில நாட்களே உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்களை ஈடுபடுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என போலீஸ் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post இறுதிக்கட்ட தீபாவளி பொருட்கள் விற்பனை நெல்லை டவுன் கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai Town ,Diwali ,KDC ,Nagar ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...