×

நடுஹட்டி பகுதியில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை

*சமுதாய நல கூடத்தை அமைச்சர், எம்பி துவக்கி வைப்பு

கோத்தகிரி : கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய நடுஹட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ.6 லட்சம் மற்றும் அரசின் பங்களிப்பு தொகை ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நல கூடத்தினை (தற்காலிக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி) தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் எம்பி ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்றோர்களிடம் வழங்கினர். மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் உரிய நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வளர்ச்சி திட்ட பணிகள் ஏற்படுத்தியும் வருகிறார்.

மேலும் நமது மாவட்டத்தில் கடந்த அக் 2ம் தேதி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது நடுவட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு நியாய விலை கடையும், குன்னூர் சென்று வர பேருந்து வசதியும் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி ஒரு மாத காலத்திற்குள் நடமாடும் நியாய விலை கடையும், குன்னூர் சென்றுவர பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி கற்கும் வழியில் நடுவட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் அடிப்படையில் நடுவட்டி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் நடமாடும் நியாய விலை கடை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாதத்தில் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் அவரவர் வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் வந்து சேரும் வகையில் இந்த நடமாடும் நியாய விலை கடை செயல்பட உள்ளது. விரைவில் நடுஹட்டி பகுதியில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் நடுவட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளியின் மூலம் நடவடி கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் தங்கள் ஊரிலேயே ஆரம்பக்கல்வி பயில முடியும். அதிலும் குறிப்பாக நடுஹட்டி துவக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் கற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, நீலகிரி எம்பி ஆ.ராசா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு நாடு போற்றும் பல்வேறு நல்ல திட்டங்களான காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் நீலகிரி மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கி வருகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நடமாடும் நியாய விலை கடை, பேருந்து வசதி, மாணவ மாணவியர்களுக்கு தற்காலிக பள்ளிக்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து அவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது போல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணக்குமார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, நடுவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நடுஹட்டி பகுதியில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : NADUHATI AREA ,Minister ,Public Welfare Hall ,Gothagiri ,Goddagiri ,Naduhati ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...