×

குளத்தூர் பகுதியில் விடிய விடிய மழை

*கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியது

குளத்தூர் : குளத்தூர் பகுதியில் விடிய விடிய மழை பெய்ததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது. குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புளியங்குளம், கெச்சிலாபுரம், வைப்பார், பூசனூர், வேப்பலோடை, வேடநத்தம், சக்கம்மாள்புரம், வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி விளை நிலங்களை, 2 மாதங்களக்கு முன்பு உழுது கம்பு, சோளம், மல்லி, உளுந்து போன்றவை விதைத்து வடகிழக்கு பருவமழைக்காக காத்திருந்தனர். ஆனால் மழை பெய்யாத நிலையில், விதைத்த விளைநிலங்கள் புழுதிகாடாக காட்சியளித்து விவசாயிகளை வேதனை அடையச் செய்தது.

மேலும் விதைத்து ஒன்றரை மாதங்களாக மழை இல்லாததால் பல ஆயிரங்களை பூமியில் விதைத்த விவசாயிகள் இந்தாண்டு விவசாயம் கேள்விக்குறிதானா என அச்சம் கொள்ளத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மீண்டும் விவசாய பணிகளை செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் 2 நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்து வருவதால் கிராமங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது, இப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: வருடந்தோறும் வடகிழக்கு பருவ மழையை நம்பித்தான் ஆடியில் உழுது, புரட்டாசி ஆரம்பத்தில் விதைக்க ஆரம்பித்து புரட்டாசி இறுதியில் பெய்ய துவங்கும் பருவமழையை அடுத்து விவசாயப் பணிகள் இப்பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும். ஆனால் இந்தாண்டு புரட்டாசி மாதம் முதல் தேதியில் பெய்த மழையோடு சரி, அதன் பிறகு 45 நாட்கள் கழித்து கடந்த 2 நாட்களாகத் தான் மழை பெய்து வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியானாலும் தாமதமாக மழை பெய்வதால் பல விளைநிலங்களில் உழுது விதைத்த விதைகள் மக்கி புழுதி காடாய்ப்போனது. இதனால் மறுபடியும் பல ஆயிரங்களை செலவழித்து உழுது விதைகளை விதைத்துத் தான் விவசாயப் பணிகளை தொடங்க வேண்டும். இதனால் இப்பகுதி கிராம விவசாயிகளுக்கு பயிர் நிவாரணத் தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

The post குளத்தூர் பகுதியில் விடிய விடிய மழை appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Kanmais ,
× RELATED குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2...