×

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் சிறையில் இருந்தே ஆட்சி நடத்துவார், அமைச்சரவை கூட்டம் சிறையில் நடத்தப்படும் : அமைச்சர்கள் பேட்டி

புதுடெல்லி:: ‘முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டால், அவர் சிறையில் இருந்து ஆட்சி நடத்துவார்,’ என்று அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். மதுபான முறைகேடு விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்த மாதம் 30ம் தேதி சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அவர் கடந்த 2ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், அதனை தவிர்த்து விட்டு தனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெறும்படி அமலாக்கத் துறைக்கு அவர் கடிதம் எழுதினார். விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜரானால், அவர் கைது செய்யப்படுவார் என்று ஆம் ஆத்மி அச்சம் அடைந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் சவுரப் பரத்வாஜ், அடிசி ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், பரத்வாஜ் கூறியதாவது:டெல்லி மக்களின் ஆணையை கெஜ்ரிவால் பெற்றுள்ளதால் , அவர் சிறையில் இருந்தாலும் ஆட்சி நடத்த வேண்டும் என்று எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் கூட, அவர் சிறையில் இருந்தே ஆட்சி நடத்துவார். அவரை அதிகாரிகளும், அமைச்சர்களும், சிறையின் வளாகத்தில் சந்தித்து, அவருடைய உத்தரவின்படி செயல்படுவார்கள்.

பாஜ.வினரும், பிரதமர் நரேந்திர மோடியும் கெஜ்ரிவாலுக்கு மட்டுமே பயப்படுகின்றனர் என்பது, அவர்கள் போடும் பொய் வழக்குகள் நிரூபித்துள்ளன. தேர்தல் மூலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க முடியாது என்பதால், இப்படிப்பட்ட சதி வேலைகளை பாஜ செய்கிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் அடிசி அளித்த பேட்டியில், முதல்வர் கெஜ்ரிவாலை மோடி அரசு கைது செய்து எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருந்தாலும், அவரே முதல்வராக தொடர்வார். நடந்து முடிந்த எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் அமைச்சரவை கூட்டத்தை சிறையில் நடத்துவதற்கான அனுமதியை பெறுவது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது,’ என்று தெரிவித்தார்.

The post கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் சிறையில் இருந்தே ஆட்சி நடத்துவார், அமைச்சரவை கூட்டம் சிறையில் நடத்தப்படும் : அமைச்சர்கள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,New Delhi ,Chief Minister ,Enforcement Department ,Minister ,Bharatwaj ,
× RELATED டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு