×

என் வீட்டில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை : வருமானவரி சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை: ‘‘என்னிடம் இருந்தோ, எனது வீட்டில் இருந்தோ வருமானவரித்துறை ஒரு பைசாவை கூட பறிமுதல் செய்யவில்லை’’ என்று கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் கடந்த 3ம் தேதி அதிகாலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையை வருமான வரித்துறையினர் இரவு 10 மணியளவில் முடிவுக்கு கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 5 நாட்களாக நடந்த வருமானவரி சேதனையில் என்னை தொடர்புபடுத்தி வெளியான தகவல்கள் எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சோதனை என்னும் பெயரில் வருமான வரித்துறையினர் எனது குடும்பத்தினரை அச்சுறுத்தி, இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் வெறும் அம்புதான். அவர்களை ஏவி விட்டவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நேரத்திலும் 2 நாட்கள் சோதனை நடத்தி என் பணியை முடக்கினர். ஆனாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றிபெற செய்தனர். கல்லூரியில் பணிபுரியும் சாதாரண ஊழியர்களை கூட தனித்தனியாக சோதனை நடத்தினர். அதை வைத்து கற்பனையான பெயரில் கதைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். விவசாய குடும்பத்தில் பிறந்தவன். திருவண்ணாமலையில் அச்சகம் தொடங்கி நடத்தினேன்.

பின்னர் லாரி உரிமையாளராகி, திரைப்பட வினியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் சம்பாதித்த பணத்தை கொண்டு, 1991ல் எனது தாய் பெயரில் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன். அதனால், இந்த பகுதியில் உள்ள கிராமத்து மாணவர்கள் பொறியியல் படித்தனர். 6 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்று மக்கள் தொண்டு செய்திருக்கிறேன். ஒருவரிடமும் நான் கையூட்டு பெற்றதாக ஒருவராலும் சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறேன். நான் தொடங்கும் கல்வி அறக்கட்டளைக்கு என் மகன்தான் தலைவராக இருக்கிறார். எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.என் பெயரில் 48.33 சென்ட் நிலமும், காந்தி நகரில் ஒரு வீட்டுமனையும், சென்னையில் ஒரு வீடும் உள்ளது. இவற்றை எனது வேட்பு மனுவிலும் தெரிவித்திருக்கிறேன்.

இதைத்தவிர ஒரு சென்ட் இடம் கூட என்னிடம் இல்லை. தொடர்ந்து நான் வருமான வரி செலுத்தி வருகிறேன். 2006-2011 காலங்களில் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது, துறையின் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றமே பாராட்டியது. 2013ல் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக என்மீது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அரசியல் நோக்கத்துக்காக போடப்பட்ட வழக்கு எனக்கூறி திருவண்ணாமலை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கீழ்கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தன.

அமைச்சர் என்ற அடிப்படையில் என்னை தேடி வருகிறவர்களை எல்லாம் என்னோடு தொடர்புபடுத்தி சோதனை செய்வது எந்த வகையில் நியாயம். தமிழ்நாட்டில் பாஜவில் தொழிலதிபர்கள் இல்லையா? திமுகவில் இருக்கிறவர்களை மட்டும் குறி வைத்து சோதனை நடத்தப்படுகிறது. திமுக தலைவரும், தொண்டர்களும் அதற்கு பயப்படுகிறவர்கள் அல்ல. சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம். ரெய்டு எனக்காரணம் காட்டி எங்கள் தொண்டையும், உழைப்பையும் நிறுத்திவிட முடியாது. 5 நாட்களாக எனது அரசுப்பணி, கட்சிப்பணி முடக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி சொன்னதை போல பாஜவின் அணிகளாக ஐடியும், ஈடியும் மாறிவிட்டன. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்திலும், ஏன், பாஜவின் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் இதுபோன்று நடந்ததில்லை.

நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி திமுகவை அச்சுறுத்துவது எந்தவிதத்தில் நியாயம். எங்கள் முதல்வர் மிசாவையே பார்த்தவர். எங்கள் இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதுதான். அந்த நோக்கம் நிறைவேற உழைப்போம். காசா கிராண்ட் நிறுவனம் யாருடையது என்று எனக்கு தெரியாது. அப்பாசாமி நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தேர்தல் பணிக்கு செல்லும் காலங்களில் தங்கியிருக்கிறேனே தவிர, அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. எனக்கோ எனது துறைக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.

கோவையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். அவரது தம்பி திமுகவில் பொறுப்பில் உள்ளார். 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். உள்ளூர்க்காரர் என்ற அடிப்படையில் நான் கோவை சென்றால் சந்தித்து பேசுவார். அதைத்தவிர அவரது தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது மனைவி மீனா அங்கு கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அதனால் என்னோடு தொடர்புப்படுத்தி பேசுவது என்ன நியாயம். தனிப்பட்ட முறையில் நேர்மையுடனும், மனச்சாட்சிக்கும் பயந்து நடப்பவன் நான்.என் வீட்டில் இருந்தோ, என்னிடம் இருந்தோ ஒரு பைசாவைகூட வருமானவரித்துறை பறிமுதல் செய்யவில்லை. ரெய்டு போன இடங்களில் பறிமுதல் செய்திருந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். மேலும் என்னுடன் பழகுகிறவர்களையும், மனு கொடுக்க வருகிறவர்களையும் விசாரணை செய்வது எந்தவிதத்தில் நியாயம்.

அபிராமி ராமநாதனுக்கும் எனக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. ரெய்டு நடந்த வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்திருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பதில் சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post என் வீட்டில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை : வருமானவரி சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister A. ,Velu ,Tiruvannamalai ,Income Tax Department ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி