×

கோர்பா ரயிலில் முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்களுக்கிடையே சிக்கி திணறிய சென்னை பெண் பயணி: ரயில்வே நிர்வாகத்திடம் பரபரப்பு புகார்

சென்னை: சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை வர, கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு,டிக்கெட் எடுத்திருந்தார்.அவருக்கு எஸ்-4 பெட்டியில் 33ம் நம்பர் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.சேலத்திற்கு கோர்பா எக்ஸ்பிரஸ் வந்ததும்,தனது சீட்டிற்கு செல்ல எஸ்-4 பெட்டியில் ஏறியுள்ளார்.அங்கு படிக்கட்டு முதல் ரயில் பெட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு கடும் நெருக்கடியில் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்திருந்ததால், தனது இருக்கை அருகே கூட அவரால் செல்ல முடியவில்லை.

ஒருகட்டத்தில் அப்பெண்ணை சூழ்ந்த வட மாநில தொழிலாளர்களால் மூச்சு கூட விட முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார். உடனே ரயில்வே நிர்வாகத்திற்கு தனது போனில் இருந்து புகார் தெரிவித்துள்ளார். பலமுறை முயற்சித்தபின், அப்புகாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அடுத்த ஸ்டேஷனான ஜோலார்பேட்டையில் வந்து பிரச்னையை ரயில்வே அதிகாரிகளோ,பாதுகாப்பு படையினரோ சரிசெய்யவில்லை. இதனால், தனது அருகே நின்றிருந்த 3 திருநங்கைகள் உதவியுடன் ஜோலார்பேட்டையில் இறங்கி, பேன்ட்ரி கார் பெட்டியில் ஏறி சென்னை வரை பயணித்துள்ளார்.

சென்னையில் இறங்கியதும், தனக்கு நேர்ந்த கதி குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில்‘‘உயிர்போற வலி’’என தலைப்பிட்டு விரிவாக எழுதினார். அதுவும் ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதுபற்றி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணையை துவங்கினர். பின்னர், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு புகாரை கொண்டு சென்றனர்.

நேற்று சேலம் கோட்ட ஆர்பிஎப் கமிஷனர் சவுரவ்குமார் மற்றும் அதிகாரிகள் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில்,வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என வலியுறுத்தினார். இதையடுத்து சேலம் வழியே வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் போலீசாரின் கண்காணிப்பு மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் சோதனை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

The post கோர்பா ரயிலில் முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்களுக்கிடையே சிக்கி திணறிய சென்னை பெண் பயணி: ரயில்வே நிர்வாகத்திடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,North State ,Kochuveli ,Salem ,
× RELATED நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு