×

பரங்கிமலை வன்னியர் சங்க கட்டிடத்தை மீட்கும் உத்தரவு ரத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: பரங்கிமலையில் வன்னியர் சங்க கட்டிடம் செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பான உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பல்லாவரம் வட்டம், பரங்கிமலை கிராமத்தில் உள்ள 41,952 சதுர அடி நிலம் தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்க கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் மீட்ட அரசு, அங்கிருந்த வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிட கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க கூடாது.

தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கன்டோன்மென்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் ஆகியவை உரிமை கோருவதால் நிலத்தை மீட்பது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post பரங்கிமலை வன்னியர் சங்க கட்டிடத்தை மீட்கும் உத்தரவு ரத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Parangimalai Vanniyar Sangh ,High Court ,Chennai ,Vanniyar Sangh ,Parangimalai ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...