×

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி போர்ச்சுகல் பிரதமர் ராஜினாமா: வீட்டில் ரெய்டு: தலைமை அதிகாரி கைது

லிஸ்பன்: ஊழல் குற்றச்சாட்டு காரணமாக போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சோதனை நடத்திய போலீசார் அவரது தலைமை அதிகாரியை கைது செய்தனர். போர்க்சுக்கல் நாட்டு பிரதமராக இருப்பவர் அன்டோனியோ கோஸ்டா. 2015ம் ஆண்டு முதல் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அடுத்தடுத்து 2 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் நாட்டில் உள்ள லித்தியத்தை பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். மேலும் ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக அவரது தலைமை அதிகாரி விட்டோர் எஸ்காரியாவை கைது செய்ததாக போர்ச்சுகலின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். அதோடு போர்ச்சுகல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையின் ஒரு பகுதியாக பிரதமரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது.
அதே போல் பிரதமரின் இல்லம் தவிர சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகங்களில் போலீஸ் சோதனை நடந்தது.

இதை தொடர்ந்து பிரதமர் கோஸ்டாவின் தனிப்பட்ட ஆலோசகர் டியோகோ லாசெர்டா, சைன்ஸின் சோசலிச மேயரான நுனோ மஸ்கரென்ஹாஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பிரதமர் இல்லத்தில் சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரதமர் கோஸ்டா, போர்த்துகீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசாவை சந்தித்தார். சிறிது நேரத்தில் பிரதமர் கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

The post ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி போர்ச்சுகல் பிரதமர் ராஜினாமா: வீட்டில் ரெய்டு: தலைமை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Portugal ,Lisbon ,Antonio Costa ,
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்