×

தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.1 லட்சம் மானிய விலையில் 15 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ: கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்

திருவள்ளூர்: தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.1 லட்சம் மானிய விலையில் 15 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்களை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பாக தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் அவர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி 15 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் மானியம் பெறுவதற்கான ஆணைகளையும், அம்மானியத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 15 ஆட்டோக்களையும் கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று முன்தினம் 15 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கி அந்த ஆட்டோக்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரண நிதியுதவி, விபத்து மரண நிதியுதவி, ஓய்வூதியம், முடக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்து விபத்து மரண நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட மானியமாக ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் எம்பிபிஎஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கட்டணம், தங்கும் விடுதி முழுக்கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் உடல்நிலை சரியில்லாமல், வேலை செய்ய இயலாதபோது தொடர் சிகிச்சை பெற அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ ரிக்சா, டாக்சி வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவரங்களுக்கு 044-27665160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனபாலன், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர் மனோகரன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலர்கள், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* திருநங்கைகளும் பயனடையலாம்
ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, திருநங்கைகளும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

* குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை சென்னை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலோ, பொன்னேரியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து பொன்னேரி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சென்னை (மண்டலம்) இணை இயக்குநர் அலுவலகம் அல்லது எண்.5, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி – 601204 என்ற முகவரியில் செயல்படும் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 – 2797 2457, 9384824406 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.1 லட்சம் மானிய விலையில் 15 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ: கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Prabhushankar ,Labor Welfare and Skill Development Department ,Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு