×

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது சென்னையில் களைகட்டும் பட்டாசு, இனிப்பு விற்பனை: குழந்தைகளை கவரும் புது ரக பட்டாசுகள்

சென்னை: தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் பட்டாசுகள், இனிப்பு வகைகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. 10,000 வாலா சரவெடி ரூ.10000க்கு விற்கப்படுகிறது. கிப்ட் பாக்ஸ்கள் குறைந்த பட்சம் ரூ.500லிருந்து விற்கப்படுகிறது. தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து எண்ெணய் குளியல் முடித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இந்த கூட்டம் இரவு 10 மணி வரை நீடித்து வருகிறது. இன்றும், நாளையும் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக சென்னையில் வர்த்தக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான துணிகளை தேர்வு செய்து வருகின்றனர். தீபத்திருநாளின் முக்கிய பொருளான பட்டாசு விற்பனையும் மாநிலம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள மொத்த ஏஜென்சிகளுக்கு பட்டாசுகள் சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களிடம் சில்லரை வியாபாரிகள் ஆர்டர்களை கொடுத்து வாங்கியுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை தீவுத்திடலில் பிரமாண்டமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அங்கு பட்டாசு கடை வளாகம் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று முதல் மேலும் தீபாவளி பட்டாசுகள் விற்பனை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, மயில் பட்டாசு, மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால், பேட், ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் பிளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. பல ரகங்கள் வந்தாலும் கடந்த ஆண்டை பட்டாசுகள் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பட்டாசு தயாரிக்க கூடிய மூலப்பொருட்கள் விலை மற்றும் பாக்கெட் செய்வதற்கான பொருட்கள் செலவு அதிகரிப்பால் பட்டாசு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பட்டாசு வியாபாரி ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்காக சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. 23 எண்ணம் அடங்கிய சின்ன கிப்ட் பாக்ஸ் ரூ.500க்கு விற்கப்படுகிறது. 31 எண்ணம் கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.800, 35 எண்ணம் கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.1000, 42 எண்ணம் கொண்ட பாக்ஸ் ரூ.1200 வரையும், விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.1600 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மேஜிக் பென்சில் பாக்ஸ் ரூ.310, ராக்கெட் பாக்ஸ் ரூ.650 முதல் ரூ.1170 வரையும், பாம்ஸ் ரூ.650 முதல் ரூ.1440 வரையும், பிளவர் போட்ஸ் பாக்ஸ் ரூ.540 முதல் ரூ.2520 வரையும், கிரவுண்ட் சாக்கர்ஸ் ரூ.330 முதல் ரூ.1340 வரையும், டீலக்ஸ் பட்டாசுகள் ரூ.8050 முதல் ரூ.13,400 வரையும், எலக்ட்ரிக் பட்டாசுகள் ரூ.9900 முதல் ரூ.18200 வரையும், ஒன் செகன்ட் வெடிக்கும் பட்டாசுகள் ரூ.7900 முதல் ரூ.16,250 வரையும் விற்கப்படுகிறது.

சவர் அன்ட் நாவல்டிஸ் வகைகள் ரூ.180 முதல் ரூ.260 வரையும், ஸ்கை சாட் பைப் ரூ.125 முதல் ரூ.434 வரையும், கவுண்டிங் சாட்ஸ் பட்டாசுகள் ரூ.127 முதல் ரூ.600 வரையும், கார்ட்டூன் அண்டு பேன்ஸி வீல்ஸ் ரூ.227 முதல் ரூ.1700 வரையும், பிஜிலி பட்டாசுகள் ரூ.220 முதல் ரூ.430 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 1000 வாலா சரவெடி ரூ.1000, 2000 வாலா சரவெடி ரூ.2000, 5000 வாலா சரவெடி ரூ.5000, 10000 வாலா சரவெடி ரூ.10000 வரைக்கும் விற்கப்படுகிறது. கம்பி மத்தாப்புகள் ரூ.22 முதல் அதிகபட்சம் ரூ.910 வரை விற்கப்படுகிறது. கலர் தீப்பெட்டிகள் ரூ.78 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல இனிப்பு வகைகளில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு சிறிய கடைகளில் தான். பெரிய கடைகளில் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியன்று உறவினர்கள், நண்பர்களுக்கு ஸ்வீட், காரம் வகைகளை கொடுக்கும் வகையில் பெரும்பாலான கடைகளில் ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளன. விலை அதிகரித்த போதிலும் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

The post தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது சென்னையில் களைகட்டும் பட்டாசு, இனிப்பு விற்பனை: குழந்தைகளை கவரும் புது ரக பட்டாசுகள் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...