×

தமிழ்நாடு முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை; 8 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

* வீடுகள் இடிந்தது முதியவர் பலி

* சதுரகிரியில் பக்தர்களுக்கு தடை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர் கனமழையால் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதில் முதியவர் ஒருவர் பலியானார். வெள்ளப்பெருக்கால் சதுரகிரியில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 8 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் பெருகி வருகிறது. இந்த மழையால் திருவாடானை வட்டம் டி.கிளியூர் கோடனூர் கிராமத்தில் நாகநாதனுக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதேபோல் கீழ்ப்பனையூர் குரூப்மாடம்பூரில் சின்னத்தம்பி என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

சிவகங்கை: தேவகோட்டையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கனமழைக்கு, ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் பெயின்டர் செல்வம்(50) வீடு இடிந்து விழுந்தது. உடனடியாக குடும்பத்தினர் வெளியேறியதால் உயிர் தப்பினர். திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டியிலிருந்து ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மலைச்சாலையில் கனமழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மலைக்கிராமங்களுக்கு செல்லும் விவசாயிகள், பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நவ.10 முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது. திருவில்லிபுத்தூர் நகரில் 108 மிமீ மழை பதிவானது. திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் வன்னியராஜ் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவரை தீயணைப்பு படையினர் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால், மழை நீர் கழிவு நீர் ஓடைகளில் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

ஈரோடு நாடார் மேடு பகுதியில் 8 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஈரோடு மோசிகீரனார் வீதியில் 35 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து, 5 வீடுகளுக்குள்ளும், ஈரோடு வீரப்பன்சத்திரம் நெசவாளர் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் உள்ள 35 வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்கு வசித்தவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஈரோடு சென்னிமலை சாலை கே.கே.நகரில் உள்ள நுழைவு பாலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு அன்னை சத்யா நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஆறுமுகம் என்பவரது வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்தது. அன்னை சத்யா நகரில் அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்கு முதியவர் பலி: ஈரோடு அன்னை சத்யா நகர் அருகே அஜந்தா நகர் உள்ளது. இப்பகுதியில் ஜமாலுதீன் (60) என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அருகே வசிக்கும் மகன்கள் வீட்டிற்கு செல்ல ஜமாலுதீன் மழையில் நனைந்தபடி சென்றார். ஆனால், மழை வெள்ளம் சூழ்ந்ததால் நடக்க முடியாமல் மழையில் நனைந்து மீண்டும் வீட்டிற்குள் வந்து படுத்தார். அப்போது ஜமாலுதீனுக்கு கடும் குளிர் ஏற்பட்டது. இதையறிந்த அவரது மகன்கள் மீட்டு அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் ஜமாலுதீன் உயிரிழந்தார். கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயில் ஆனைக்கிடங்கு அருகே ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக அந்த பகுதியில் சுமார் 25 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அருகே வெட்டிமுறிச்சான் கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டுள்ளது.

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் இரவு முதல் மாநகரின் முக்கிய பகுதிகளில் பெய்த மழையால், காக்காதோப்பு பகுதியில் உள்ள பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்தது. தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய இந்த வீட்டின் உரிமையாளர், சிங்கப்பூரில் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக வீட்டில் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து நேற்று மாலை 127 அடியானது.

வெள்ள எச்சரிக்கை: கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததால் 3,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் 116.75 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய வழியாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை; 8 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chathuragiri Chennai ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...