×

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு சொப்னா உட்பட 44 பேருக்கு ரூ.66 கோடி அபராதம்: சுங்கத்துறை அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சொப்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உட்பட 44 பேருக்கு சுங்கத்துறை ரூ.66.60 கோடி அபராதம் விதித்து உள்ளது. துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020 ஜூலை 5ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இது தொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சொப்னா, தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சுங்கத்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சொப்னா, தூதரக முன்னாள் துணைத் தூதர் ஜமால் உசேன் அல் சாபி, ராஷித் காமிஸ் அல் அஷ்மேயி, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சமும், சொப்னாவின் கணவர் ஜெய்சங்கருக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 44 பேருக்கு மொத்தம் ரூ.66.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது . இதற்கிடையே பிடிபட்ட 30 கிலோ தங்கம் தவிர திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 2019 நவம்பருக்கும், 2020 மார்ச்சுக்கும் இடையே இவர்கள் ரூ.46.50 கோடி மதிப்பு உள்ள மேலும் 136.828 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

* டாலர் கடத்தல் வழக்கிலும் அபராதம்
டாலர் கடத்தல் வழக்கிலும் சொப்னா கூட்டாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டாலர் கடத்தலில் சொப்னா, சிவசங்கர், சரித்குமார் மற்றும் சந்தீப் ஆகியோருக்கு தலா ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யூனிட்டாக் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்தோஷ் ஈப்பன் என்பவருக்கு ரூ.1 கோடியும், அமீரக தூதரக முன்னாள் அதிகாரியான காலித் என்பவருக்கு ரூ.1.30 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு சொப்னா உட்பட 44 பேருக்கு ரூ.66 கோடி அபராதம்: சுங்கத்துறை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Sobna ,IAS ,Sivashankar ,Customs ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!