×

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.3,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 44,270 பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

The post கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...