×

கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குளை கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்தல் – இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை: தமிழ் நாட்டில், அறுவடைக் காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதிலிருந்து தவிர்த்திடவும், சேமிப்பு இழப்புகளின்றி பாதுகாத்திடவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 100 மெ.டன், 500 மெ.டன், 1000 மெ.டன் மற்றும் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 4044 கிடங்குகள் 5,47,100 மெ.டன் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளன.

கிடங்குமேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் (WDRA) விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிடங்குகளில் சேமித்து வைக்கவும் வங்கிகளிலிருந்து அதன் மீது கடன் பெறவும் ஏதுவாக electronic Negotiable Warehouse Receipt (eNWR) திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 1151 கூட்டுறவுச் சங்கக் கிடங்குகள் கிடங்குமேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. இதனை பாராட்டி இவ்வாணையத்தின் புதுடெல்லியில் நடைபெற்ற 13-வது ஆண்டு விழாவில் (01.11.2023) இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகள் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்த வகையில் தமிழ்நாட்டிற்கு முதலிடத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் வெங்கடேசன், இணைப்பதிவாளர் (சட்டம் மற்றும் பயிற்சி) பெற்றுக்கொண்டார்.

கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) வழிகாட்டுதல்களின்படி விவசாய உறுப்பினர்கள் பயனடையும் வகையில் 31.10.2023 வரை நேர்மறை மதிப்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் 1151 கிடங்குகள் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கிடங்குகள் WDRA ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள், 7% என்ற குறைந்த வட்டிவிகிதத்தில் eNWR மூலம் தானிய ஈட்டுக்கடன் பெற முடியும். 2022-23 ஆம் ஆண்டில் 334.68 கோடியும் 2023-24 ஆம் ஆண்டில் 31.10.2023 வரை 128.23 கோடியும் விவசாயிகளுக்கு தானியஈட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குளை கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்தல் – இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Warehouse Development Regulatory Authority ,Tamil Nadu ,India ,CHENNAI ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...