×

பிரியாணி கடை உரிமையாளர் கொலை!: பணியில் அலட்சியமாக இருந்த நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்.. விழுப்புரம் சரக டிஐஜி அதிரடி..!!

கடலூர்: பணியில் அலட்சியமாக இருந்த விவகாரத்தில் கடலூர் மாவட்டம், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சூப்பர் பஜாரில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். நெய்வேலி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளிலும் இந்த பிரியாணி கடைக்கு கிளைகள் உள்ளன. இவர் கடந்த அக்டோபர் 26ம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.

நெய்வேலி நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம கும்பல், அவர் மீது திடீரென கற்களை வீசி தாக்கியது. இதில் நிலைதடுமாறிய கண்ணன் கீழே விழுந்தார். உடனே அவர் எழுந்து ஓட முற்பட்டார். அதற்குள் அந்த கும்பல் சுற்றி வளைத்து, கண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஆகஸ்டு மாதம் கண்ணனின் பிரியாணி கடைக்கு வந்த சிலர் ஓசிக்கு பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி அறிந்த அவர்கள், மறுநாள் கண்ணனின் கடைக்கு வந்து, அவரை கத்தியால் வெட்டி உள்ளனர். முன்விரோதம் காரணமாக கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணியில் அலட்சியமாக இருந்த விவகாரத்தில் கடலூர் மாவட்டம், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நெய்வேலி பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட புகாரில் ஆய்வாளர் லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரியாணி கடை உரிமையாளர் கடைக்கு வந்து இரண்டு முறை பிரச்சனை செய்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்படுவார் என திட்டமிட்ட நுண்ணறிவு புலனாய்வு போலீஸ் எச்சரித்தும் அலட்சியம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

The post பிரியாணி கடை உரிமையாளர் கொலை!: பணியில் அலட்சியமாக இருந்த நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்.. விழுப்புரம் சரக டிஐஜி அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : Biryani ,Neyveli Thermal Police ,Viluppuram Cargo ,Cuddalore ,Cuddalore District ,Neyveli Thermal Police Station ,Inspector ,Lada ,Dinakaran ,
× RELATED ஊராட்சிமன்ற தலைவர் ஏற்பாட்டில்...