×

தங்கக் கடத்தல் வழக்கு: மாஜி ஐஏஎஸ் சிவசங்கர், சொப்னாவுக்கு அபராதம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சொப்னாவுக்கு ரூ.6 கோடி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சம் என்று மொத்தம் 44 பேருக்கு சுங்கத்துறை ரூ.66.60 கோடி அபராதம் விதித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020 ஜூலை 5ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப் உள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் முதன் முதலாக நடந்ததால் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சொப்னா, தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தூதரக முன்னாள் துணை தூதரான ஜமால் உசேன் அல்சாபி, தூதரகத்தில் அட்டாஷே என்ற உயர் பதவியில் இருந்த ராஷித் காமிஸ் அல் அஷ்மேயி, சொப்னாவின் கணவர் ஜெய்சங்கர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் கைதான அனைவருக்கும் சுங்கத்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி சொப்னா, தூதரக முன்னாள் துணைத் தூதர் ஜமால் உசேன் அல் சாபி, ராஷித் காமிஸ் அல் அஷ்மேயி சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சமும், சொப்னாவின் கணவர் ஜெய்சங்கருக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 44 பேருக்கு மொத்தம் ரூ.66.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

The post தங்கக் கடத்தல் வழக்கு: மாஜி ஐஏஎஸ் சிவசங்கர், சொப்னாவுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivashankar ,Sobna ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்