×

வங்கதேச அணியிடம் தோல்வி; வருங்காலங்களில் சிறந்த அணியாக செயல்படுவோம்: இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் பேட்டி

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையிடம் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அசலங்கா 108 ரன் குவித்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் 82 ரன்களும் நஜ்முல் சாண்டோ 90 ரன்களும் எடுத்து 41.1 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்கள். அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 6வது தோல்வியை பதிவு செய்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக இலங்கை தொடரில் இருந்து வெளியேறியது.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் கூறுகையில், ‘அசலங்கா அபாரமாக விளையாடினார். ஹெல்மெட் பழுதானதால் வரலாற்றிலேயே முதல் முறையாக காலதாமதத்திற்காக மேத்யூஸ்க்கு அவுட் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் நாங்கள் 30, 40 ரன்கள் குறைவாக எடுத்தோம். இருப்பினும் இத்தொடரில் சில இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர் தோல்விகளால் எங்களது அணி தடுமாறினாலும் வருங்காலத்தில் சொல்லி அடிக்கும் கில்லி போன்று நிச்சயமாக நாங்கள் சிறந்த அணியாக உருவெடுப்போம். இத்தொடரில் எங்களுடைய சில முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்தனர். மேலும் நாங்களும் சில தவறுகளை செய்தோம்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில், ‘டாஸ் வென்று பந்து வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை. ஏனென்றால் பயிற்சியின்போது இரவில் பனி அதிகமாக இருந்தது. நாங்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். மேலும் போட்டியை முடிக்க நினைத்தோம். மேத்யூஸ் களத்தில் கால தாமதம் செய்தபோது, எங்கள் அணி வீரர் ஒருவர், ‘இப்போது டைம் டு அவுட் முறையில் அப்பீல் செய்தால் அவர் அவுட்’ என்று என்னிடம் கூறினார். உடனே அப்பீல் செய்தேன். பின்னர் நடுவர்கள் என்னிடம் வந்து, ‘நீங்கள் உறுதியாக கேட்கிறீர்களா அல்லது இதை திரும்ப பெற போகிறீர்களா’ என்றார்.

அது கிரிக்கெட் சட்டங்களில் இருக்கிறது. அது சரியா, தவறா என்பது குறித்து யோசிக்கவில்லை. அந்த விவகாரத்தில் நடுவர்கள் தலையிட்டு சரியான தீர்ப்பு வழங்காதது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்தவித கவலையும் இல்லை. ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற நாங்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் காரணமாக நான் உறுதியான ஒரு முடிவை எடுக்க விரும்பினேன்.

இது நிச்சயம் பெரிய விவாதத்தை கிளப்பும் என்று தெரியும். இது விதிகளில் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் எனக்கு எந்த கவலையும் கிடையாது. மேத்யூஸ் உடனான அந்த வாக்குவாதம் எனக்கு கொஞ்சம் சிறப்பாக செயல்பட உதவியது. எனக்கு இப்பொழுது 36 வயதாகிறது. எனவே எளிதில் சண்டை எல்லாம் வராது. ஆனால் இன்று (நேற்று) வந்தது கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது’ என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

வங்கதேச கேப்டன் செய்தது அசிங்கமானது; மேத்யூஸ் கடும் விமர்சனம்: அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது. இப்படியான சூழ்நிலையில் இதுவரையிலான சர்வதேச கிரிக்கெட்டில் டைம் டு அவுட் என்கிற ரீதியில் எந்த பேட்ஸ்மேனும் ஆட்டம் இழக்காத போது, வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அப்பீல் செய்து மேத்யூஸ் விக்கெட்டை பறித்தார். இது இந்த போட்டியை மட்டுமல்லாமல் நடப்பு உலக கோப்பையையும் சுவாரசியமாக்கி இருக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த விஷயத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. வங்கதேசம் மற்றும் அந்த அணியின் கேப்டன் ஷாகிப் நடந்து கொண்ட விதம் மிகவும் அவமானகரமானது. கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல் நடந்து கொண்டார்கள். 15 ஆண்டுகளாக நான் விளையாடிய எதிரணிகளில் இப்படி ஒரு அணியை நான் பார்த்ததில்லை. இது மிக மோசமான அணியாக இருக்கிறது’ என்று காட்டமாக பேசினார்.

The post வங்கதேச அணியிடம் தோல்வி; வருங்காலங்களில் சிறந்த அணியாக செயல்படுவோம்: இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Kushal Mendes ,New Delhi ,ICC World Cup Cricket Series ,Delhi ,Bangladesh ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...