×

பாசன வாய்க்கால் சீரமைக்காததால் அய்யலூர் ஏரி தண்ணீர் வயலுக்குள் புகுந்தது: வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூர்: பாசன வாய்க்கால் சீரமைக்காததால் அய்யலூர் ஏரி தண்ணீர் நெல் வயலுக்குள் புகுந்தது. தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழைக்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் நேற்று வரை 28 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் சிறுவாச்சூர் அருகேயுள்ள அய்யலூர் ஏரியும் ஒன்றாகும். அய்யலூர் கிராமத்திற்கு தெற்கேயுள்ள ஏரி கடந்த 7ம் தேதி முதல் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியை நம்பி 102 ஏக்கர் விளை நிலங்கள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஏரிநீர் செல்லக்கூடிய பாசன வாய்க்கால் சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏரியிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் வாய்க்கால் அடைப்புகளால், உடைப்புகளால் அருகிலுள்ள வயல்களில் புகுந்து விட்டன. இதனால் அய்யலூரை சேர்ந்த முருகராஜ்(55), ரமேஷ் (45), தினேஷ்(27), மருதை (60), முருகேசன்(50) உள்ளிட்ட 10 பேர்களின் 25 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த தண்ணீரை வயலில் இருந்து வெளியேற்ற விவசாயிகள் தினம்தினம் போராடி வருகின்றனர். இன்னும் 2 நாள் கடந்தால்கூட பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலையில் உள்ளன. எனவே விரைந்து பாசன வாய்க்காலை சரி செய்து ஏரி தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அய்யலூர் அருகே செல்லக்கூடிய மருதையாற்றில் மழைவெள்ள நீர் அ.குடிக்காடு, சிறுகன்பூர், தெற்குமாதவி, நத்தக்காடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள 200ஏக்கர் பருத்தி, மக்காச்சோள வயல்களில் புகுந்துள்ளதால் பயிர் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறைகளை கொண்டு கூட்டாய்வு நடத்தி இழப்பீடு வழங்கிட மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மருதையாறு கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பாசன வாய்க்கால் சீரமைக்காததால் அய்யலூர் ஏரி தண்ணீர் வயலுக்குள் புகுந்தது: வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Perambalur ,Ayyallur ,Dinakaran ,
× RELATED கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது