×

‘நம்ம சாலை’ மொபைல் செயலி மூலம் அனுப்பிய புகார் 24 மணி நேரத்தில் சாலை சீரமைப்பு

*தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி

திருமயம் : அரிமளம் அருகே “நம்ம சாலை” செயலியின் மூலம் வந்த புகாருக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதிலிருந்து அனைத்து துறைகளிலும் மக்கள் பயன்பாட்டை புகுத்தி ஒவ்வொரு துறைகளிலும் உள்ள நன்மை தீமைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு காலத்தில் ஏதாவது ஒரு துறைகளில் குறைகள் இருக்கு பட்சத்தில் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து மக்கள் கொடுத்த புகார் நடவடிக்கை எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. அதேசமயம் ஒரு சில புகார்கள் அதிகாரிகள் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிடுகின்றனர்.இதனைப் போக்கும் வகையில் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் மொபைல் செயலிகள் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த துறைகளில் உள்ள குறைகளை செயலிகளில் மக்கள் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதனை உடனடியாக அதிகாரிகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு கால நிர்ணயமும் செய்யப்படுகிறது. அவ்வாறு தீர்க்க முடியாத பிரச்சனைகளை புகார் தெரிவித்த நபரிடம் பிரச்சனை தீர்க்க முடியாத காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படியாக மின்சாரத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சாலைகளில் ஏற்படும் பள்ளம் உள்ளிட்டவைகளுக்கு உடனடி தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மூலம் \”நம்ம சாலை\” மொபைல் செயலி ஒன்று கடந்த 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள், சேதம் அடைந்த பாலங்கள் போட்டோ உடன் செயலியில் மக்கள் பதிவேற்றம் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை மூலம் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேதம் அடைந்த பகுதியை மக்கள் போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்வதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கடைவீதி பகுதிகளில் சாலையில் பள்ளங்கள் உள்ளதாக கே.புதுப்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் நம்ம செயலி மூலம் போட்டோ அனுப்பி புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திருமயம் நெடுஞ்சாலை துறை செயலி மூலம் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் சேதம் அடைந்த சாலையை சரி செய்தனர்.

இந்நிலையில் சாலை உடனடியாக சரி செய்யப்பட்ட நிலையில் செயலியை அறிமுகம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துறை அமைச்சர் மற்றும் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு கே.புதுப்பட்டி வர்த்தக சங்கம், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post ‘நம்ம சாலை’ மொபைல் செயலி மூலம் அனுப்பிய புகார் 24 மணி நேரத்தில் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Tamil Nadu ,Thirumayam ,Arimalam ,Dinakaran ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்