×

கோவர்த்தன கிரியைத் தாங்கிய கோபாலன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மாமல்லபுரத்தில் பாறை சிற்பக் காட்சிகள் பலவுண்டு. அவற்றில் தலைசிறந்தவை பகீரத தவக்காட்சியும், கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடிக்கும் கண்ணபிரானின் காட்சியும் ஆகும். பகீரத தவ காட்சிக்கு முன் மண்டபம் போன்ற எந்தத் தடையும் இல்லாததால் அதன் முழு எழிலையும் நாம் சுவைக்க முடியும். அதனை ஒட்டியே உள்ள கோவர்த்தனகிரி காட்சிக்கு முன்பு பின்னாளில் ஒரு மண்டபத்தினை எடுத்துள்ளனர். அதனால் கண்ணன் ஆயர்பாடியைக் காக்க கோவர்த்தன கிரியைத் தூக்கும் எழிற்கோலத்தை நாம் முழுமையாகக் காண இயலாது. அக்காட்சியின் நுட்பச் சிறப்பை நாம் நுகர வேண்டுமாயின் கண்ணனின் வரலாற்றையும் ஆழ்வார்களின் பாசுரக் கூற்றுகளையும் அறிந்து திளைத்து பின்பு அச்சிற்பக் காட்சியைக் காண்போமாயின் அதன் மாட்சிமை நமக்குப் புரியும்.

கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியின் மக்கள் இந்திர விழா கொண்டாடியபோது மந்திர விதிப்படி பூசனைகள் செய்யாததால் வெகுண்ட வானவர் தலைவனான இந்திரன் கோபமுற்று ஆயர்பாடி அழியுமாறு கல் மழையினைப் பெய்யச் செய்தான். ஆநிரைகளும், ஆயர்களும், ஆய்ச்சியரும் செய்வதறியாது அலறி ஓடியபோது, கண்ணபிரான் அங்கு வந்து அங்கிருந்த கோவர்த்தனம் என்னும் மலையைக் கையால் எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி குடையாகப் பிடித்தான். அம்மலையோ கல்மாரியைத் தாங்கிக்கொண்டு ஆயர்பாடியைக் காத்து நின்றது.

கண்ணன் வந்து கொற்றக் குடையாகக் கோவர்த்தன மலையைப் பிடித்தவுடன் அஞ்சி ஓடிய ஆயர்பாடி மக்கள் அமைதியுற்றனர். கல்மாரி கடுமையாகப் பெய்தும் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பசுக்கள் மகிழ்ச்சியுற்று பால் பொழிந்தன. கன்றினை வருடி கனிவைக் காட்டின. ஆயர் மகளிரோ குழந்தைக்கு அமைதியாகப் பால் கொடுக்கத் தொடங்கினர். ஆய்ச்சியர் வெண்ணெய் கடைந்து மோர் தூக்கிச் செல்லலாயினர். ஆயர்களோ பால் கறக்கத் தொடங்கினர். அவரவர் பணி அமைதியாக நடைபெறலாயிற்று. அன்று கண்ணன் குடை பிடிக்கவில்லை என்றால் கல்மாரியால் ஆயர்பாடியே அழிந்திருக்கும்.

பாகவதம் புகலும் இவ்வரலாற்றைத் திருமங்கையாழ்வார்,
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழநடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தம் ஓடின ஆநிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்ற அழகு தமிழ் பாசுரமாகப் பாடியுள்ளார். இதே செய்தியினைப் பெரியாழ்வார், ‘‘ஆயனார் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை’’ என்று குறிப்பிட்டுள்ளார். திருமங்கை மன்னனோ மீண்டும்,

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்ல எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே

என்ற பாடல் வழி கல்மாரி பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கியுள்ளார். ஊரின் நடுவண் திகழும் மாமல்லை குன்றத்தின் கீழ்த்திசையில் பக்கவாட்டுப் பாறையில் ஒரு நீண்ட சிற்பத் தொகுதி காணப்பெறுகின்றது. எழிலுறு அக்காட்சிக்கு முன்பாகக் கற்தூண்களை நட்டு மண்டபமொன்றினைப் பிற்காலத்தில் எடுத்துள்ளனர். இம்மண்டபம் அச்சிற்பங்களைக் காப்பதற்கென எடுக்கப் பெற்றிருந்தாலும், அச்சிற்பங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை மறைப்பதாகவே உள்ளது.

விஜயநகர அரசு காலத்தில் எடுக்கப்பெற்ற இம்மண்டபத்திற்குச் சற்றுத் தள்ளி எதிர்த்திசையில் நின்றவாறு நம் மனக் கண்களால் அம்மண்டபத்துத் தூண்களையும், கூரையையும் அகற்றிவிட்டு உள்ளே தெரியும் காட்சியை உற்று நோக்குவோமாயின் நெடிதுயர்ந்த கண்ணபிரான் தன் இடக்கரத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி மாமல்லை குன்றத்தைத் தாங்கி நிற்பது தெரியும். மாமல்லை மலையே கோவர்த்தன கிரியாக நமக்குக் காட்சி தரும்.

கண்ணனின் அருகே பலராமன் கைகட்டி நிற்கும் முதியவரான ஆயர் ஒருவரின் தோளில் கைவைத்து பரிவோடு அணைத்து நிற்பார். குன்றத்தைத் தூக்கி நிற்கும் கண்ணபிரானைச் சுற்றி ஆயர்பாடியே அங்கு காட்சியளிக்கும். பின்புலம் முழுவதும் பசுக்கூட்டங்கள். கம்பீரமான காளை ஒன்று அங்கு நிற்க கன்றுகளும், காலிகளும் சுற்றி நிற்கின்றன.

அழகிய கொம்புகளுடன் திகழும் பசு ஒன்று தன் கன்றின் முதுகில் நாக்கினால் வருடி தாய்மை உணர்வை வெளிப்படுத்த ஆயன் ஒருவன் அதன்மடி சொறியும் பாலினைப் பாத்திரமொன்றில் கறக்கும் காட்சி ஒருபுறம். அருகிருக்கும் ஆய்ச்சியர் மகள் ஒருத்தி தன் குழந்தைக்குப் பாலூராட்டுகின்றாள். அங்கு நிற்கும் ஆயனொருவன் குழலொன்றினைக் கையில் ஏந்தி அமுத கீதம் இசைக்கின்றான்.

ஆயர்குலப் பெண் ஒருத்தி தலையில் ஓலைப்பாயைச் சுருட்டி சுமந்தவாறு, தன் வலக்கரத்தில் தயிரும், வெண்ணெயும் உள்ள பானைகள் கொண்ட உரியைப் பிரித்தவாறு செல்கின்றாள். ஆயனொருவன் கைக் குழந்தையை முதுகில் சுமந்தவண்ணம் நீண்ட கோலுடன் செல்ல அவன் மனைவியோ சிறுபிள்ளை ஒருவன் கரம் பற்றியவாறு மோர்க்குடங்களைத் தலையில் சுமந்து செல்கிறாள்.

கோவர்த்தன கிரியை குடையாகத் தூக்கிப் பிடிக்கும் கண்ணனைச் சுற்றி ஆயர்குலப் பெண்கள் நின்றவாறு வியந்து அவனை நோக்குகின்றனர். கடுமையான கல்மாரி பெய்து கொண்டிருக்க கடுகளவும் கவலையில்லாமல் ஆயர்பாடி மக்கள் மகிழ்வோடு அவரவர் பணியினை அவரவர் மேற்கொண்டுள்ளனர். பசுக்களும் காளைகளும் மகிழ்வோடு திரிகின்றன. கல்மாரியை நோக்கி மலைக்குடையிலிருந்து வெளியே செல்ல முற்படும் ஆயன் ஒருவன் கரத்தை அவன் மனைவி பற்றி உள்ளே இழுக்கும் காட்சியும் அங்கு ஒருபுறம் இருப்பதைக் காணலாம். மாமல்லை குன்றத்தையே கோவர்த்தன மலையாக மாற்றிக் காட்டி இருக்கிறான் பல்லவனின் சிற்பி. இக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கியவாறு ஆழ்வார்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

தன் ஐந்து விரல்களைக் குன்றத்தின் அடியில் வைத்தவாறு தன் இடக்கரத்தை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் இக்காட்சியைப் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும் அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும், விளங்க அதன்மேல் மலைகவிந்து குடையாக இருப்பதைக் காண்கின்றார். இதனை,செப்பாடுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்கப்பாக மடுத்து மணிநெடுந்தோள் காம்பாகக் கொடுத்து கவித்த மலை என்று பாடுகின்றார். இப்படிக் கண்ட பெரியாழ்வாருக்கு மேலும் ஒரு காட்சி புலப்படுகின்றது. கண்ணபிரான் விரல்களை விரித்து அம்மலையைத் தாங்கும் காட்சி.

ஆதிசேடன் தன் ஐந்து தலைகளைப் படமாக விரித்து அதன்மேல் பூமியைத் தாங்குவதுபோல் தோன்றிற்று. அதனை, படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்தடங்கை விரலைந்தும் மலரவைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான்என்று ‘கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே’ என்ற ஈற்றடி வருமாறு பாடிய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லை சிற்பக் காட்சியில் ஆநிரைகளோடு குழந்தையைத் தோளில் சுமந்த ஆயன் ஒருவன் செல்ல அவன் பின்னே சிறுவன் ஒருவனுடன் மோர்ப் பானையைத் தலையில் சுமந்து தாய் ஒருத்தி செல்லுதலும், அருகே ஆயர்பாடி பெண்கள் கண்ணனைச் சூழ்ந்து நிற்பதையும் காணும் போது,

தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றாணிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி யிளங் கன்னி மார்களை நேர் படவே கொண்டு போதி
காய்வார்க் கென்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறித் திரியும்
ஆயா உன்னை யறிந்து கொண்டேன் உனக் கஞ்சும் அம்மம் தரவே

என்ற பெரியாழ்வாரின் பாடல் பல்லவ சிற்பியின் உள்ளத்தை உருகச் செய்திருக்க வேண்டும் என்பது அறியலாம்.ஆயர்பாடியின் அழகையும், குன்றமெடுத்து கல்மாரி தடுத்த கோபாலனின் தோற்றத்தையும் கண்முன் நிறுத்திய பல்லவ சிற்பி இக்காட்சி மூலம் தொண்டை மண்டலத்து மரபுவழி வந்த அம்மண்ணுக்குரிய கால்நடைகளின் உருவ அமைப்பை உலகம் உள்ளளவும் நிலையாகப் பதிவு செய்து விட்டான். தமிழகத்தின் மண்ணுக்குரிய கால்நடை இனங்கள் மறைந்து வரும் இந்நாளில் இத்தகைய சிற்பப் பதிவுகள் எதிர்கால சந்ததிகளுக்கு மரபுப் பெருமையை நிச்சயம் உணர்த்தும்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post கோவர்த்தன கிரியைத் தாங்கிய கோபாலன் appeared first on Dinakaran.

Tags : Gobartana ,Mamallapuram ,Bhairatha Thawkadachya ,Kovartana Kiri ,Gobaratna ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்