×

புதிதாக போடப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட கசிவால் சங்கரன்கோவிலில் வீணாகும் குடிநீர்

*குடிநீர் வடிகால் வாரிய பணி விரைவுபடுத்தப்படுமா?

சங்கரன்கோவில் : புதிய குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் வெளியேறி வீணாகச் செல்வதோடு சாலையும் சேதமடைந்து வருகிறது. இதனால் அவதிப்படும் மக்கள், இதை உடனடியாக சரிசெய்யாமல் மந்தகதியில் செயல்படும் குடிநீர் வடிகால் வாரியத்தினர், இப்பணியை விரைவுப்படுத்த முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர்.
சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இப்பணி முடிவுற்ற நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த சோதனையின் போது நகரின் பல இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே ஊற்று போல் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது.

குறிப்பாக, சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலை, ஐந்து வீட்டு லயன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதைதொடர்ந்து தண்ணீர் கசிவை சரி செய்யும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் முறையாக மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் புதிதாக போடப்பட்ட சாலைகள் குடிநீர் கசிவால் சேதமடைந்து வருகிறது.

ஏற்கனவே குடிநீர் கசிவை சரி செய்த குடிநீர் வடிகால் வாரியத்தினர் சாலையை சீரமைக்க காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் வாகனத்தில் வருவோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீர் வடிகால் வாரியத்தினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுப்பது மட்டுமின்றி சாலைகள் சேதமடைவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் நகர் முழுவதும் புதிதாக போடப்பட்ட குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்யும் போது குடிநீர் வடிகால் வாரியத்தினர் சேதமான சாலைகளில் கான்கிரீட் அமைக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இதனால், சாலையும் உருக்குலைந்து வருகின்றன.

பெரும்பாலான சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகனத்தில் செல்லும்போது வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். இதுவரை மந்தகதியில் செயல்படும் குடிநீர் வடிகால் வாரியத்தினர், இனியாவது இப்பணியை விரைவுப்படுத்த முன்வருவார்களா? என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளை சீரமைப்பதுடன் குடிநீர் வீணாக வெளியேறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்’’என்றனர்.

நான்கு வழிச்சாலை சேதம்

இதனிடையே சங்கரன்கோவில் ரயில்வே கேட் முதல் திருவேங்கடம் சாலை சந்திப்பு வரை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த சாலையில் குடிநீர் கசிவால் சேதமடைந்துள்ளன. இதனை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தினர் முறையாக சரி செய்யாததால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post புதிதாக போடப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட கசிவால் சங்கரன்கோவிலில் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Sankaran temple ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...